தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி அமைந்ததை அடுத்து, கொரோனா நெருக்கடி மத்தியிலும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அனைத்து கோயில்களிலும் ஆய்வு மேற்கொண்டு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அன்மையில் கூட நெல்லையப்பர் கோயிலில் ஆய்வு செய்தபோது, 16 ஆண்டுகளாக மூடப்பட்டு இருக்கும் கோபுர வாசலைத் திறக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். உடனே அமைச்சர் சேகர்பாபு உத்தரவை அடுத்து மூடப்பட்டிருந்த கோபுர வாசல்கள் திறக்கப்பட்டு, அதன் வழியாகப் பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், குமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரத்தில் உள்ள கல்குளம் நீலகண்ட சுவாமி கோயிலை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற 100 ஆண்டுகளைக் கடந்துள்ள கோயில்களைக் கணக்கிட்டு உடனடியாக அங்கு குடமுழுக்கு விழா நடத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நீலகண்ட சுவாமி கோயிலைப் பொறுத்தவரையில் எந்த ஆண்டு குடமுழுக்கு நடந்தது என்பதாக வரலாறு இல்லை. அதுவும் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயிலாக இந்த கோயில் விளங்குகிறது. இங்கு குடமுழுக்கு நடத்த ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.
வெளிநாட்டில் உள்ள சிலைகளை மீட்கவும், சிலைகள் மேலும் திருட்டுப் போகாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட கோயில் சிலைகள், தங்க ஆபரணங்களை மீட்பு தொடர்பாக எஸ்.பி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழா நடத்த ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.