தமிழ்நாடு

“அரசியல் இனியும் இல்லை - ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு” : நடிகர் ரஜினி முடிவு!

அரசியல் இனியும் இல்லை என மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

“அரசியல் இனியும் இல்லை - ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு” : நடிகர் ரஜினி முடிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நேரத்தில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்கப் போகிறார் என்ற பேச்சு தொடர்ச்சியாக அடிபடும். அதன்படி, தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போதுகூட ரஜினிகாந்த் நிச்சயம் இந்த தேர்தலில் சந்திக்கப்போகிறார் என சொல்லப்பட்டது. மேலும் இதற்கான முயற்சிகளிலும் ரஜினிகாந்த் தீவிரம் காட்டினார்.

இந்நிலையில், “திடீரென நான் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை” என அறிக்கை விட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து ‘அண்ணாத்த’ திரைப்படத்திற்கான வேலையில் தீவிரமாக இருந்தார். இருந்தபோதும் ரஜினி ரசிகர்கள் அவ்வப்போது நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இதையடுத்து ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஜினி மருத்துவ சிகிச்சைக்காகவும், ஓய்வு எடுப்பதற்காகவும் அமெரிக்கா சென்று சென்னை திரும்பினார். பிறகு இன்று திடீரென கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில், தனது மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்நிலையில் நிர்வாகிகள் உடனான ஆலோசனைக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வரமுடியவில்லை என்று சொன்ன பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது. அதை விளக்கவேண்டியது என்னுடைய கடமை.

நான் அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை, ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல பதவிகளையும், பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம். காலச் சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை.

ஆகையால் 'ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைத்துவிட்டு' சார்பு அணிகள் எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணைச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக முன்புபோல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாகச் செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க தமிழ் மக்கள்! வளர்க தமிழ்நாடு!! ஜெய்ஹிந்த்!!!" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories