கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மீட்கப்பட்டதாக கூறும் 8,700 கோயில் நிலங்கள் குறித்த பட்டியலை எதிர்கட்சித் தலைவர் வெளியிட வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் சேகர்பாபு, “கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8,700 கோயில் நிலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுவது உண்மை எனில் அவற்றின் பட்டியலை வெளியிட வேண்டும்.
அவ்வாறு கோயில் நிலங்கள் மீட்கப்பட்டிருந்தால் சிவகங்கையில் இருக்கும் கௌரி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் முன்னாள் அமைச்சரின் உறவினர்களிடம் இருந்து ஏன் மீட்கப்படவில்லை?
கடந்த 55 நாட்களில் 520 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில்களுக்குச் சொந்தமான 79.5 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் கோயில் இடங்களில் வசிப்பவர்கள் விவரங்கள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
40 ஆயிரம் பேருக்கு அறநிலையத்துறையில் பணி வழங்குவதற்கு விவரங்களை திரட்டி வைத்ததாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுவது உண்மைக்குப் புறம்பானது ” எனத் தெரிவித்தார்.