நீட் ஆய்வுக்குழுவுக்கு எதிராக பா.ஜ.க வழக்கு தொடர்ந்திருப்பது மாநில சுயாட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.
சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா என்று ஆராய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், 8 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்தக் குழு நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அமைத்ததற்கான அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நீட் தேர்வு குறித்த ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக பா.ஜ.க வழக்கு தொடர்ந்தது மாநில சுயாட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசியுள்ள கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈஸ்வரன், “நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஜனநாயக ரீதியாக குழு அமைத்த தமிழ்நாடு அரசின் நடவடிக்கை மீது என்ன தவறை கண்டார்கள்? இந்த விவகாரத்தில் பா.ஜ.கவுக்கு பயம் வந்துவிட்டது. மத்தியில் பா.ஜ.க ஆட்சியில் இருப்பதால் மாநில அரசுகளின் முடிவுகளை தமிழ்நாடு பா.ஜ.க எதிர்க்கிறதா?
தமிழ்நாடு அரசு குழு அமைத்து ஆராய்வதை கூட பொறுத்துக்கொள்ள முடியவில்லையா? ஒன்றிய அரசு தமிழ்நாடு பா.ஜ.கவை வைத்து மாநில சுயாட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை நிலைநிறுத்தப் பார்க்கிறதா என்றும் சந்தேகம் எழுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.