தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை இன்று தொடங்கி வைத்து அரசின் கொள்கை அறிக்கையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாசித்தார்.
ஆளுநர் உரையில், “சமூக நீதி, ஆண் பெண் சமத்துவம், அனைவருக்குமான பொருளாதார நீதி, இட ஒதுக்கீடு மூலம் அனைவருக்கும் வாய்ப்பு, கல்வி மற்றும் சமூகச் சீர்திருத்தத்தின் மூலம் முன்னேற்றம் ஆகிய திராவிட இயக்கத்தின் கொள்கைகளை இந்த அரசு தன் அடித்தளமாகக் கொண்டுள்ளது. இந்த அரசின் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு சட்டமும், ஒவ்வொரு திட்டமும், ஒவ்வொரு முயற்சியும் மேற்கூறிய கொள்கைகளையே அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
தமக்கு வாக்களித்தோர் என்றும், வாக்களிக்காதோர் என்றும் எந்த பாரபட்சமும் இன்றி, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்குமான அரசாக இந்த அரசு எப்போதும் செயல்படும்.
திராவிட இயக்கத்தின் மகத்தான தலைவர், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மறைந்து ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த அரசு பதவியேற்றுள்ளது. இந்த மாமன்றத்தில் அறுபதாண்டுகள் அரும்பணியாற்றிய ஓர் ஒப்பற்ற தலைவராக அவர் திகழ்ந்தார். அவர் நம்முடன் இன்று இல்லை என்றாலும், அவருடைய கொள்கைகள் இந்த அரசை எப்போதும் வழிநடத்திச் செல்லும்.” எனத் தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் குறித்து தெரிவித்தார்.
ஆளுநர் உரை பெருத்த கவனம் பெற்றுள்ளது. ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த காற்றாலைகள் ரீ-பவரிங் குறித்த அறிவிப்பை ‘பூவுலகின் நண்பர்கள்’ சுற்றுச்சூழல் அமைப்பு வரவேற்றுள்ளது.
இதுதொடர்பாக ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சுந்தர்ராஜன் ஃபேஸ்புக்கில் எழுதியுள்ள பதிவு வருமாறு:
இன்று ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த காற்றாலைகள் "ரீபவரிங்" (Re-powering) என்றால் என்ன, அது ஏன் முக்கியம்?
தமிழ்நாடு உள்ளீட்ட காற்றாலைகளை பயன்படுத்தி அதிகமாக உற்பத்தி செய்யக்கூடிய மாநிலங்களில், நிறுவப்பட்ட ஆலைகள் 1980களில் வந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த உற்பத்தி திறன் கொண்டவை. ஆரம்ப காலகட்டத்தில் இவற்றின் உற்பத்தித்திறன் 200கிவா அளவில் இருந்தன பிறகு படிப்படியாக உயர்ந்து இப்போது 8 மெவா திறன் கொண்ட காற்றாலைகள் வந்துவிட்டன. ஆனால் தமிழகத்தில் அதிக காற்றாலை உற்பத்திக்கு ஏதுவான இடங்களில் எல்லாம் 200-500கிவா உற்பத்தித்திறன் கொண்ட காற்றாலைகள் முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே நிறுவப்பட்டு விட்டன.
எங்கெல்லாம் காற்றாலை உற்பத்தி தளங்கள் உள்ளனவோ அங்கேயெல்லாம் அதிக அதிக உற்பத்தி திறன் கொண்ட அலைகளால் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும், சுற்றுச் சூழலை மாசாக்காமல், இப்போது இருக்கும் காற்றாலைகளின் உயரமும் குறைவு, ஆனால் 120 மீ உயரம் கொண்ட புதிய ஆலைகளால் அதிக உற்பத்தியை செய்யமுடியும்.
இந்திய நிலப்பரப்பில் காற்றாலைகள் மூலம் சுமார் 6,95,000 மெவா மின்னுற்பத்தி செய்யமுடியும் என்கின்றன ஆய்வுகள். இதைத்தவிர தமிழகம் மற்றும் குஜராத்தில் மாநிலங்களில் மட்டும் அருகாமை கடல் பகுதிகளில் காற்றாலைகள் மூலம் சுமார் 1,00,000 மெவா உற்பத்தி செய்யமுடியும் என்கிறது ஆய்வறிக்கை. அனல் மின்நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விட சுமார் 7%குறைவான செலவில் காற்றாலையில் மின்னுற்பத்தி செய்யமுடியும் என்கிறது global wind energy council.அதுமட்டுமில்லாமல்,wind energy re-powering மூலம் ஒருவருடத்திற்கு சுமார் 5,000 மெ.வா கூடுதலாக மின்னுற்பத்தி செய்யமுடியும். மின்னுற்பத்தியில் பயன்படுத்தப்படும் பல தொழில்நுட்பங்களில் காற்றாலை மூலம் நடைபெறும் மின்னுற்பத்தி மிக குறைந்த செலவில் (LCOE) நடைபெறுகிறது என்பதை நினைவில் கொண்டால் ஆளுநர் உரையில் பெற்றுள்ளதன் முக்கியதுவத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.
மின்சாரத்தை உற்பத்தி செய்து, பகிர்மானத்திற்கு கொண்டு சென்று நுகர்வோரை சென்றடையும் வரை ஏற்படக்கூடிய இழப்புகள் 25-35% ஆகும், இதை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.