தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின், முதன் முறையாக, நேற்று முன்தினம் (17 ஆம் தேதி) தலைநகர் டெல்லிக்கு 2 நாள் அரசு முறைப் பயணமாகச் சென்றார்.
அன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்து தமிழ்நாட்டின் நலனுக்கான 25க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார். நேற்று காலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி.சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை அவர்களுடைய இல்லத்தில் சந்தித்து உரையாடினார்.
அப்போது திருமதி. சோனியா காந்தி அவர்களும், ராகுல்காந்தி அவர்களும் தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். இச்சந்திப்பை அடுத்து, ட்விட்டரில் ராகுல் காந்தி பதிவிட்டதாவது பின்வருமாறு:-
“காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தியும் நானும் (ராகுல்காந்தி) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களையும், அவருடைய துணைவியார் திருமதி. துர்கா ஸ்டாலின் அவர்களையும் சந்திக்கும் மகிழ்ச்சியை இன்று (18.6.2021) காலை பெற்றோம். தமிழ் மக்களுக்காக ஒரு வலுவான, வளமான மாநிலமாகத் தமிழ்நாட்டை உருவாக்கிட நாங்கள் தி.மு.கழகத்துடன் இணைந்து தொடர்ந்து செயல்படுவோம்!” எனத் தெரிவித்துள்ளார்.