தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின், முதன் முறையாக, நேற்று முன்தினம் (17 ஆம் தேதி) தலைநகர் டெல்லிக்கு 2 நாள் அரசு முறைப் பயணமாகச் சென்றார்.
அன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்து தமிழ்நாட்டின் நலனுக்கான 25க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார். பின்னர் நேற்று காலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி. சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை, தமது துணைவியாருடன் சென்று சந்தித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாடினார்.
அதன்பின்னர், அச்சந்திப்பு குறித்து ‘ட்விட்டரில்’ பதிவிட்ட முதல்வர் அவர்கள், ‘முத்தமிழறிஞர் கலைஞர் காலம் தொட்டுத் தொடரும் உறவு இது’ என்று குறிப்பிட்டார். முதல்வர் அவர்களின் அந்த ‘ட்விட்டர்’ பதிவு வருமாறு:-
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களையும், முன்னாள் தலைவர் சகோதரர் ராகுல் காந்தி அவர்களையும் சந்தித்துப் பேசினோம். முத்தமிழறிஞர் கலைஞர் காலந் தொட்டே தொடரும் உறவு இது! நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்ந்தேன்” இவ்வாறு அப்பதிவில் முதல்வர் அவர்கள் நெகிழ்ந்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் the journey of a civilization புத்தகத்தை பரிசளித்தார். தமிழ்நாட்டின் பழமையான திராவிட கலாச்சாரம், ஆரிய வருகையின் கலப்பு உள்ளிட்ட அம்சங்களை ஆராயும் மிக முக்கிய புத்தகம் இதுஎன்பது குறிப்பிடத்தக்கது.