தலையாட்டிகளின் வசம் இருந்த தமிழ்நாடு அரசு முதன்முதலாக தலைநிமிர்ந்து நிற்பவர் கைக்கு வந்துள்ளது என்பதைத் தான் டெல்லி சென்று சொல்லி வந்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
முரசொலி நாளிதழில் வெளியான தலையங்கம் பின்வருமாறு:-
தமிழ்நாடு முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதன்முறையாக தலைநகர் டெல்லி சென்று இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்து இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!
பத்து ஆண்டுகள் கழித்து கழகம் ஆட்சிக்கு வந்துள்ளது. முதன் முதலாக முதல்வர் ஆகி இருக்கிறார் மு.க.ஸ்டாலின் - என்பது போன்ற முக்கியத்துவங்கள் இதில் இருந்தாலும் இதனையும் தாண்டிய அரசியல் முக்கியத்துவத்தை இந்திய ஊடகங்கள் இந்த சந்திப்புக்கு கொடுத்துள்ளன. இந்த சந்திப்பு மூலமாக இந்திய அரசியலில் மாற்றம் வருமா, பா.ஜ.க.வுடன் தி.மு.க நெருங்கி வருகிறதா என்பது போன்ற சந்தேகக் குறிகளை அவர்கள் போட்டு எழுதி வந்தார்கள். இது முழுக்க முழுக்க தமிழ்நாட்டின் நலனுக்கான சந்திப்பு என்பதை தெளிவாக விளக்கிவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மாநிலத்தின் முதலமைச்சராக முதன்முதலாக தேர்வான ஒருவர், பிரதமரை சந்திப்பது வழக்கமான மரியாதை நிமித்தமான சந்திப்பாக மட்டும் பார்க்க வேண்டிய நிலையில் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றது மட்டும் அதனையும் தாண்டிய முக்கியத்துவம் பெற்றதற்குக் காரணம், தமிழ்நாட்டின் கோரிக்கையாக 120 பக்கம் கொண்ட மாபெரும் பட்டியலை அவர் கொடுத்திருப்பதுதான்.
தமிழ்நாடு கடந்த பத்தாண்டு காலத்தில் அதளபாதாளத்துக்குப் போய்விட்டது. அனைத்து உரிமைகளையும் ஒன்றிய அரசுக்கு விட்டுக் கொடுத்தது மட்டுமல்ல, தலையாட்டிப் பொம்மை அரசாக அ.தி.மு.க அரசு இதுவரை செயல்பட்டு வந்துள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக முதல்வர் கொடுத்த அறிக்கை அமைந்துள்ளது.
“நான் முதல்வர் ஆகியுள்ளேன். பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்” என்பதோடு முதல்வரின் பேட்டி அமைந்திருந்தால் அது பத்தோடு பதினொன்று செய்தியாக மாறி இருக்கும். ஆனால் தமிழ்நாட்டுக்கு 25 துறைகளின் வாயிலாக என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பட்டியல் போட்டு மோடியிடம் கொடுத்து விட்டு வந்திருக்கிறார் முதல்வர்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டி அதன் நீர்வரத்தை தமிழ்நாட்டுக்கு குறைக்கத் திட்டமிட்டு வருகிறது கர்நாடகா. அந்த திட்டத்துக்கு மத்திய ஜல்சக்தித் துறை அனுமதியை ரத்து செய்தால்தான் காவிரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள். அந்தக் கோரிக்கையை முதல்வர் வைத்துள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களில் அனுமதி தரப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், அங்குள்ள நில வளத்தை அழித்து வருகிறது. இதனை வேளாண் மண்டலமாக மாற்ற வேண்டும் என்று டெல்டா மாவட்டத்து மக்கள் கோரிக்கை வைத்தார்கள்.
கண்துடைப்புக்காக இதனை வேளாண் மண்டலமாக அ.தி.மு.க அரசு அறிவித்தது. ஆனால் பழைய திட்டங்கள் அப்படியே செயல்படும் என்றது. அதாவது பழைய திட்டங்களை அப்படியே செயல்பட வைப்பதற்கான தந்திரம் தான் இது என்பதை மக்கள் உணர்ந்தார்கள். எனவேதான் அனைத்து திட்டங்களுக்கும் அனுமதி தர மாட்டோம் என்று முதல்வர் அறிவித்தார். 200 நாட்களைத்தாண்டி நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகிறார்கள். அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யச் சொல்லி இருக்கிறார் முதல்வர்.
ஈழத்தமிழர் நலனைக் காக்கும் சில கோரிக்கைகள் அதில் உள்ளன. ஈழத்தில் நடக்கும் இடைவிடாத போரால் அங்கு வாழமுடியாமல் தமிழ்நாடு வந்திருக்கும் நமது தொப்பூழ் கொடி உறவுகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது மிக முக்கியமான வேண்டுகோள். அதேபோல், இலங்கைக் கடற்படையினரால் தொல்லைக்கு உள்ளாகி வரும் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதற்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்பதும் முக்கியமான கோரிக்கை. 2014 ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் இலங்கைக் கடற்படையினரால் தமிழர்களும், பாகிஸ்தான் கடற்படையினரால் குஜராத் மீனவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்று பேசினார் மோடி. மறந்தார் மோடி. அதனை நினைவூட்டி இருக்கிறார் முதல்வர். கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என்பதும் நம்முடைய நீண்ட காலக் கோரிக்கை. இலங்கையை சீனா மொத்தமாக கபளீகரம் செய்யத் தொடங்கி உள்ள இக்காலத்தில் கச்சத்தீவை இந்தியா மீட்பது என்பது இந்தியாவின் பாதுகாப்புக்கே மிகமிக முக்கியமானது என்பதால் அந்தக் கோரிக்கைக்கு இந்தியாவின் அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்.
மாநில சுயாட்சியின் குரலை முதல்வர் உரக்க முழங்கி இருக்கிறார். தமிழகத்துக்கு சுமார் 11 ஆயிரம் கோடி வரையிலான பணம், ஒன்றிய அரசால் தரப்பட வேண்டும். அதேபோல், ஜி.எஸ்.டி வரி பாக்கி என்பது நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. மாநிலங்களின் வரி வருவாய் உரிமையை ஒன்றிய அரசு பறித்தது. நாங்களே உங்களுக்குத் தருவோம் என்றார்கள். ஆனால் வசூலித்து வைத்துக் கொண்டார்கள். தரத் தயங்குகிறார்கள். தர மறுக்கிறார்கள்.
இதனைத் தைரியமாகக் கேட்டுள்ளார் முதல்வர். புதிய மின்சார சட்டம், புதிய கல்விக் கொள்கை, மூன்று வேளாண் சட்டம், குடியுரிமை சட்டம் - ஆகிய ஒன்றிய அரசின் அனைத்து சட்டங்களும் ஜனநாயக விரோதமானவை. மக்கள் விரோதமானவை. இவை அறிவிக்கப்பட்டபோதே எதிர்த்தது தி.மு.க. மக்கள் மன்றத்தில் எதிர்ப்புக் காட்டியது தி.மு.க. இதோ இப்போது நேரடியாகவே பிரதமரிடம் சொல்லி இருக்கிறோம். ஒரு மாநில அரசாக. கோடிக்கணக்கான மக்களின் குரலாக!
பல்வேறு நெஞ்சாலைகள், துறைமுகங்கள், விமானநிலையங்கள் மேம்பாட்டுத் திட்டங்கள் என்று பட்டியலிட்டுள்ளார் முதல்வர். அனைத்திலும் முக்கியமாக தடுப்பூசிகள். கொரோனா காலத்தில் தடுப்பூசியை வழங்குவதில் கூட ஒன்றிய அரசு ஓரவஞ்சனை காட்டியது. தமிழ் நாட்டுக்குத் தேவையான அளவுக்கு தடுப்பூசி கொடுங்கள் என்று கேட்டார் முதல்வர். செங்கல்பட்டில் மூடிக்கிடக்கும் தடுப்பூசித் தொழிற்சாலையை நாங்கள் நடத்திக் கொள்கிறோம் என்றார் முதல்வர்.
அதற்கும் அனுமதி தரவில்லை. உயிர்காக்கும் ஒரு பிரச்சினையில் கூட ஒன்றிய அரசு எப்படி நடந்து கொள்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். ‘தடுப்பூசி போடுவதில் வெளிப் படைத்தன்மை இல்லையே?” என்று முதல்வரிடம் டெல்லி நிருபர் ஒருவர் கேட்டார். “போதுமான அளவு தடுப்பூசி கொடுத்தாலே வெளிப்படைத் தன்மை வந்துவிடுமே? எவ்வளவு தடுப்பூசி இருக்கிறது என்பதைக் கூட வெளியில் சொல்லக் கூடாது என்று ஒன்றிய அரசு கட்டுப்பாடு விதிக்கிறதே” என்று முதல்வர் பதில் அளித்தார்.
இதுதான் உரிமைக்குரல். மாநில சுயாட்சியின் குரல். டெல்லி இதுவரை கேட்காத குரல். டெல்லிக்கு வந்திருப்பவர் தி.மு.க.வின் தலைவர் என்பதை உணர்த்தும் குரல். பேரறிஞரின் குரல். முத்தமிழறிஞரின் குரல். டெல்லிக்கு நேற்றைய தினம் இதுதான் சொல்லப்பட்டுள்ளது. இதுவரை தலையாட்டிகளின் வசம் இருந்த தமிழ்நாடு அரசு முதன்முதலாக தலைநிமிர்ந்து நிற்பவர் கைக்கு வந்துள்ளது என்பதைத் தான் டெல்லி சென்று சொல்லி வந்திருக்கிறார் முதல்வர்!
பிரதமருக்கு முதல்வர் சால்வை அணிவிக்கும் போதே நிமிர்ந்து நின்றார் என்பதை மிகச் சரியாக அடையாளம் கண்டு சமூக ஊடகங்கள் பாராட்டுகின்றன. தலைநிமிரப் போகிறது தமிழ்நாடு என்பதையே இது காட்டுகிறது!