தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவிற்கு புதிய உறுப்பினர்களாக 8 பேர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நியமித்தார். அதில் பகுதி நேர உறுப்பினராக பத்மஸ்ரீ முனைவர் நர்த்தகி நடராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரைப் பற்றி “Abpnadu.com” ‘யூடியூப்’பில் வெளியாகி பல பேர்களின் வரவேற்பைப் பெற்ற சிறப்புச் செய்தியை இங்கே எடுத்து வெளியிட்டுள்ளோம்.
“Abpnadu.com” இல் பத்மஸ்ரீ முனைவர் நர்த்தகி நடராஜ் பற்றி வெளியாகியுள்ள சிறப்புச் செய்தி வருமாறு:-
மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவிற்கு புதிய உறுப்பினர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்து உத்தரவிட்டுள்ளார். அக்குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள், ஏற்கனவே மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள். இதில் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் திருநங்கையான நர்த்தகி நடராஜின் தேர்வு பலரின் வரவேற்பைப் பெற்ற ஒன்றாக உள்ளது.
மதுரை அனுப்பானடி பகுதியில் வசிக்கும் பெருமாள் பிள்ளை - சந்திராம்மாள் இணையருக்கு 5வதாக ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தை ஒருகாலத்தில் நடனக்கலையை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் என பெற்றோர் அறிந்திருக்கவில்லை. என்றாலும், ஆடல் கடவுளான நடராஜின் பெயரைக்கொண்டு அக்குழந்தைக்கு ‘நடராஜ்’ என பெயர் சூட்டப்பட்டது.
சிறு வயதிலேயே தம்மில் பெண் தன்மை இருப்பதை உணர்ந்த நடராஜ் பெண்களின் உடைகளை அணியத் தொடங்கினார். இத்தகைய செயல்பாடுகளால் சமூகத்தினர் மத்தியிலும், உறவினர்கள் மத்தியிலும், கேலி செய்யப்பட்ட நடராஜ், இதேபோல பெண் தன் மையை உணர்ந்த தன் சக நண்பரான பாஸ்கருடன் இணைந்து மதுரையில் உள்ள திரையரங்குகளில் திரைப்படங்களில் வரும் நடனக் காட்சிகளைப்போல் அக்காட்சிகளைப்போல் நடனமாடி நடனத்தைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்தார்.
பள்ளிகளில் சக மாணவர்களின் கேலிகளுக்கும், வார்த்தை வன்மங்களுக்கும் ஆளான நடராஜும், பாஸ்கரும் 11ம் வகுப்புக்குப் பின் பள்ளிக்குச் செல்வதை நிறுத்தினர். தங்கள் குடும்பத்தினரே தங்களை உதாசீனப்படுத்தியது தொடர்ந்ததால் ஊரைவிட்டுச் செல்ல வேண்டிய கட்டாயம் அவர்கள் இருவருக்கும் ஏற்பட்டது. ஊரை விட்டு எங்கே செல்வது? ஊரை விட்டுச் சென்றால் நெறி தவறி வாழ நேரிடுமோ என்ற கேள்விகள் நடராஜ் மனதில் எழுந்த நிலையில், நடிகை வைஜெயந்திமாலாவிற்கு நடனம் கற்றுத்தந்த குருவான கிட்டப்பா பிள்ளையை பற்றி இருவரும் அறிகின்றனர்.
அவரைத் தேடி தஞ்சை சென்று கிட்டப்பாபிள்ளையை சந்திக்கின்றனர். இருவரையும் தங்களது சிஷ்யைகளாக ஏற்கக் கோரிய அவர்களை ஓராண்டு காலம் நடனம் சொல்லித்தராமல் காக்க வைத்திருந்தார் கிட்டப்பாபிள்ளை. நடனத்தின்பால் இருவருக்கும் இருக்கும் அர்ப்பணிப்பைப் பார்த்த கிட்டப்பாபிள்ளை நான்கு ஆண்டுகள் கற்க வேண்டிய நடன அடவுகளை ஒரே ஆண்டுக்குள் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். நடராஜின் பெயரை நர்த்தகி நடராஜ் என்றும், பாஸ்கரின் பெயரை சக்தி என்றும் அவர் மாற்றினார்.
தனது குரு கிட்டப்பா பிள்ளை மறைவுக்குப் பிறகு சென்னைக்கு குடியேறி தொழில்முறையாக நடன நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார் நர்த்தகி நடராஜ். தான் பிறந்த ஊரான மதுரையின் மற்றொரு பெயரான வெள்ளியம்பலம் என்ற பெயரில் நாட்டியப்பள்ளியைத் தொடங்கி இளம் தலைமுறைக்கு பரத நாட்டியம் சொல்லிக்கொடுத்து வரும் நர்த்தகி நடராஜ், பெண்ணைக் குறிக்கும் ‘நங்கை’ என்ற சொல்லுக்கு முன்பாக ஆணைக் குறிக்கும் ‘திரு’ என்ற விகுதியைச் சேர்த்து திருநங்கை நர்த்தகி நடராஜ் என தனது பெயருக்கு முன்னால் ‘திருநங்கை’ என்று பயன்படுத்திவந்தார்.
நர்த்தகி நடராஜின் 30 ஆண்டு கால நாட்டியச் சேவையைப் போற்றும் வகையில் இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருதை அளித்துள்ளது. மேலும் தமிழக அரசின் உயரிய விருதான ‘கலைமாமணி’ பட்டத்தையும் நர்த்தகி நடராஜ் பெற்றுள்ளார். இந்தியாவிலேயே முதல் பாஸ்போர்ட் பெற்ற திருநங்கையும் நர்த்தகி நடராஜ் தான். தற்போது உலகில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் ‘வருகை தரும் பேராசிரியராக’ உள்ளார் நர்த்தகி நடராஜன்.
மாநில வளர்ச்சிக் குழுவின்பகுதி நேர உறுப்பினராக நர்த்தகி நடராஜனைத் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நியமித்துள்ளார். தமிழகத்தில் திருநங்கைகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவர்களுக்கு கௌரவமான வாழ்க்கையை அமைத்துத் தரவும், திருநங்கைகளின் உரிமையைப் பாதுகாக்க என்னென்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளை நர்த்தகி நடராஜ் வழங்க வேண்டும் என்பதற்காகவே அவரை பகுதிநேர உறுப்பினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளனர்.