திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பெரியகோளாப்பாடி எச்.எச்.495 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இதில் அ.தி.மு.கவைச் சேர்ந்தவர் கூட்டுறவுச் சங்கத் தலைவராக இருக்கிறார்.
இவர் கடந்த 3 ஆண்டுகளாகச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலத்தில் ஆவணங்களை வைத்து விவசாயக் கடன் பெறுவதற்காக மனு கொடுத்தால், மனுவை வாங்காமல் விவசாயிகளைத் தொடர்ந்து அலைக்கழித்து வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
ஆனால், அ.தி.மு.க கட்சியைச் சேர்ந்த நபர்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கு இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்க மனு வாங்கபடுவதாகவும், மேலும் சங்கத்தில் வரும் அனைத்து திட்டங்களும் அவர்களே தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இந்நிலையில், நேற்று வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் செ.அகரம், பாலியப்பட்டு, பெரும்பாக்கம், கோளாப்பாடி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், விவசாயக் கடன் பெறுவதற்காகத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் குமாரிடம் மனு கொடுக்க சென்றனர்.
அப்போது, கூட்டுறவு சங்க செயலாளர் குமார் அனைத்து மனுக்களையும் வாங்காமல் அ.தி.மு.கவைச் சேர்ந்த கூட்டுறவு சங்கத் தலைவர் அய்யனார் அவர்களிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு தான் தங்களிடம் மனுவை வாங்குவேன் என விவசாயிகளை அவதூறான வார்த்தைகளால் பேசி மனு வாங்காமல் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால், ஆவேசமடைந்த விவசாயிகள், விவசாயிகள் கூட்டுறவுச் சங்க செயலாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட கூட்டுறவுச் சங்க மேற்பார்வையாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளிடம் விசாரணை மேற்கொண்டு, பின்னர் மனுக்களைப் பெற்றுக் கொண்டனர்.
பின்னர் இது குறித்து விவசாயிகள், “கூட்டுறவுச் சங்க தேர்தல் முடிந்த பின்னர் அ.தி.மு.க சார்பில் கூட்டுறவுச் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அய்யனார் என்பவர் அவர்களின் உறவினர்களுக்கும், கட்சிக்காரர்களுக்கு மட்டுமே கூட்டுறவு சங்கத்திலிருந்து கடன் வழங்கி வருகிறார். மற்ற விவசாயிகளுக்குக் கடன் வழங்கப்படுவதில்லை. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.