சென்னை பூங்கா நகரில் உள்ள கந்தகோட்டம், அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோயிலில் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் முதற்கட்ட பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கு பயணவழிப் பைகளை வழங்கி, ஆன்மிகப் பயணப் பேருந்துகளை அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதற்கு முன்னதாக அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் அவர்களின் ஆன்மீகப் பயணத்திற்கும் உறுதுணையாக அரசு இருக்கிறது. இந்தாண்டு 420 பேரை காசிக்கு அழைத்துச் செல்ல போகிறோம்.2024-ஆம் ஆண்டில் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 1008 மூத்த குடிமக்கள் ரூ.1.58 கோடி அரசு நிதியில் அறுபடை வீடுகளுக்கு 5 கட்டங்களாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
இதுவரையில் திருவிளக்கு பூஜையில் 47,304 பெண்கள் பங்கேற்று உள்ளனர். 1800 நபர்களுக்கு கட்டணமில்லா திருமணம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 1400 பேருக்கு கட்டணமில்லா திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.இதுவரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆன்மீகப் பயணத் திட்டங்களால் பயனடைந்துள்ளனர்.அடுத்தாண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும்.
முதலமைச்சர் பிறந்த நாள் விழாவில் தங்கர்பச்சான் முதலமைச்சரை புகழ்ந்து பேசிய காணொளி காட்சியை உங்களுக்கு காட்டுகிறேன். அப்படி புகழ்ந்து பேசி இருப்பார், அவர் இப்போது விமர்சித்துள்ளார். இரட்டை நாக்கு படைத்தவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை.
கோவில் யானைகளுக்கு அந்தந்த கோவில்களிலே குளியல் தொட்டி, மருத்துவ கண்காணிப்பு வழங்கப்பட்டு வருகிறது. தேவை ஏற்படும் பட்சத்தில் யானைகளை புத்துணர்வு முகாம்களுக்கு அழைத்து செல்வது குறித்து பரிசீலனைக்கப்படும். ஜீவராசிகளின் மீதும் அன்பு செலுத்தும் முதல்வர் தான் நமது முதல்வர்" என்று கூறினார்.