தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதிலிருந்து பொதுமக்களை காக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த தடுப்பூசிகளை கிராமப்புற மக்கள் போட்டுக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் வெறும் 8 சதவீதம் மக்கள் மட்டுமே தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் நாடாளுமன்ற தி.மு.க குழு துணைத் தலைவரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார்.
இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மக்களும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் வகையில் மாவட்டம் முழுதும் 1,745 குக்கிராமங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு கடந்த 6 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் குக்கிராமங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த முகாம்கள் நடைபெறும் 40க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்ற கனிமொழி எம்.பி தடுப்பூசி முகாம்களை துவங்கி வைத்தார். மேலும் அந்தப் பகுதியில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளை கொரோனா தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளும் தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டனர். இதைத்தொடர்ந்து கிராம மக்களும் தடுப்பூசி எடுத்துக் கொண்டு வருகிறார்கள். கடந்த ஆறு நாட்களில் மட்டும் சுமார் 3,700 கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்கள் தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளனர்.
தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய மக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் வரை இந்த தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். நகர்ப்புறத்தில் உள்ள மக்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களில் உள்ள மக்களும் கொரோனா தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில், கனிமொழி எம்.பி எடுத்த இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தொடர்ந்து 12 நாட்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் தங்கியிருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம் ஒட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் நேரில் சென்று கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.