தமிழ்நாடு

“இது விடுமுறை காலம் அல்ல; கொரோனா காலம் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!

முழு ஊரடங்கு என்பது பொதுமக்களின் நன்மைக்காகத் தான் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை உணராதவர்களாக சிலர் இருப்பது வேதனை தருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“இது விடுமுறை காலம் அல்ல; கொரோனா காலம் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை தலைமைச் செயலகத்தில், கொரோனா தொற்றுப்பரவலை கட்டுப்படுத்துதல் குறித்தும், முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும் அனைத்து அனைத்துச் சட்டமன்றக் கட்சி உறுப்பினர்கள் குழுக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :-

கொரோனா என்ற பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தவும் -அதனால் பாதிக்கப்பட்டவர்களைக் காக்கவும் - தமிழக அரசு முழு முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது.தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவையும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் வழங்கி வரும் அனைத்து சட்டமன்றக் கட்சி உறுப்பினர்களுக்கும் எனது சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பெருந்தொற்றை ஒழிக்க வேண்டும் என்பது ஒன்றே நமது இலக்காக இப்போது இருக்கிறது.அந்த எண்ணத்துக்கு அரசியல் மாறுபாடுகள், வேறுபாடுகள் அனைத்தையும் மறந்து நாம் அனைவரும் செயல்பட்டாக வேண்டும்.அத்தகைய எண்ணம் தான் நம் அனைவருக்கும் இருக்கிறது.கட்சி எல்லைகளைக் கடந்து நாம் இங்கு கூடியிருக்கிறோம். நம் அனைவரது ஒரே நோக்கம் கொரோனா ஒழிப்பு என்பதாக மட்டும் தான் இருக்க வேண்டும்!

“இது விடுமுறை காலம் அல்ல; கொரோனா காலம் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!

கடந்த 13-ஆம் தேதி அன்றும் இதேபோல் அனைத்துச் சட்டமன்றக் கட்சிகள் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்டு உங்கள் கருத்துகளையும் மருத்துவ ஆலோசனைக் குழுவின் கருத்துகளையும் கேட்டபிறகு ஊரடங்கு குறித்தான சில விதிமுறைகளை வகுத்து நடைமுறைக்குக் கொண்டுவந்தது தமிழக அரசு. அந்த நடைமுறைகளில் சற்று மாற்றங்களை பொதுமக்களின் நலன் கருதியும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், 17-5-2021 முதல் கூடுதலாக சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

இது வரும் 24-5-2021 அன்று முடிவுக்கு வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு, அதன் பரவல் சங்கிலியை உடைப்பதே முக்கியமானது. அந்தச் சங்கிலியை உடைப்பதற்காகவே முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கு குறித்த அடுத்தகட்ட முடிவுகளை எடுப்பதற்காகத்தான் இந்த ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என்பதை முதலில் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருவதை நீங்கள் அறிவீர்கள். அதன் விவரங்களைச் சுருக்கமாக உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். இதில் முக்கியமானது ஆக்சிஜன் தேவை ஆகும். ஆக்சிஜன் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்வதை தமிழக அரசு தனது மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

“இது விடுமுறை காலம் அல்ல; கொரோனா காலம் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!

• ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் தமிழக அரசு கேட்டுக் கொண்டதன்படி, தமிழகத்திற்கான 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீட்டினை ஒன்றிய அரசு 519 மெட்ரிக் டன்னாக உயர்த்தியுள்ளது.

• ஒடிசா மாநிலத்திலிருந்து தினந்தோறும் 100 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பெறப்பட்டு வருகிறது. விமானங்கள் மூலம் காலி டேங்கர்கள் அனுப்பப்பட்டு இரயில்கள் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பெறப்பட்டு வருகின்றன.

• ஒடிசா மாநிலத்திலிருந்து விநியோகிக்கப்படும் ஆக்சிஜனை உரிய முறையில் பெறும் பணிகளை தமிழகத்தைத் சேர்ந்த இரண்டு இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் ஒடிசாவிலேயே தங்கி மேற்பார்வைப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

• மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்தும் 900 மெட்ரிக் டன் அளவிலான ஆக்சிஜன் பெறுவதற்கு தமிழ்நாடு அரசு அம்மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இது தற்போது அம்மாநில அரசின் பரிசீலனையில் உள்ளது. இதற்காகவும் தனியே ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலர் நியமிக்கப்பட்டு அவர் மகாராஷ்டிராவிலேயே தங்கி மேற்பார்வை பணிகளை மேற்கொள்ளவுள்ளார்.

• தமிழ்நாட்டிலேயே டிட்கோ மூலம் இதர தொழில் நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் இணைந்து ஆக்சிஜன் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

• மனித உயிர்களைக் காக்கும் சாதனங்களை ரூபாய் 40 கோடி செலவில் இறக்குமதி செய்ய தொழில்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதில், ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் சிலிண்டர், ரெகுலேட்டர், ப்ளோமீட்டர்ஸ் மற்றும் ஆக்சிஜனை நிரப்பிவைக்கும் உறைநிலை சேமிப்புக் கலன்கள் (Cryogenic Iso tankers) ஆகியவை உள்ளடங்கும்.

• சிங்கப்பூரிலிருந்து 2150 சிலிண்டர்களை வாங்குவதற்கு சிப்காட் மூலமும், 1000 சிலிண்டர்கள் ஊஐஐ மூலமும் வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், துபாயிலிருந்து 800, தென்கொரியாவிலிருந்து 975, மலேசியாவிலிருந்து 380 சிலிண்டர்களும் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளன.

• ரூபாய் 22 கோடி செலவில் 2675 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சென்னை மாநகராட்சி மூலம் வாங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், சிங்கப்பூரிலிருந்து ரூபாய் 20 கோடி செலவில் 5000 செறிவூட்டிகளையும், லெபனானிலிருந்து 185 செறிவூட்டிகளையும் வாங்குவதற்கும் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

• உலக வங்கியின் மூலமாக 2000 ஆக்சிஜன் செறிவூட்டிகள் கடன் அடிப்படையில் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

• சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் 2000 செறிவூட்டிகளையும் உலக சுகாதார நிறுவனம் 100 செறிவூட்டிகளையும் வழங்க முன்வந்துள்ளன.

• சிங்கப்பூரிலிருந்து 2630 ரெகுலேட்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் 1780 ரெகுலேட்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

• சிங்கப்பூரிலிருந்து கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்ட 3250 ப்ளோ மீட்டர்களில், தற்போது 250 ப்ளோ மீட்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

• பல்வேறு மாவட்டங்களில் 156 மினி ஆக்சிஜன் தயாரிக்கும் கூடங்கள் அமைக்க பல்வேறு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

•ரூபாய் 23 கோடி செலவில் 12 கிரையோஜெனிக்ஸ் டேங்குகள் சீனாவிடமிருந்தும், 5 டேங்குகள் தைவானிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

•ஆக்சிஜன் ஆப்டிமைசர் என்ற சாதனத்தின் மூலம் ஆக்சிஜன் உபயோகம் அரசு மருத்துவமனைகளில் குறைக்கப்பட்டுள்ளது.

“இது விடுமுறை காலம் அல்ல; கொரோனா காலம் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!

• தமிழ்நாட்டில் ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு 30 சதவிகிதம் மூலதன மானியம் வழங்க அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 31 வரை உள்ள காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அத்தகைய நிறுவனங்களுக்கு இம்மானியம் கிடைக்கும். வம்பர் 30-க்குள் குறைந்தபட்சம் 10 மெட்ரிக் டன் அளவில் ஆக்சிஜன் தயாரிக்க முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு ஐந்தாண்டுகளில் 30 சதவிகிதம் மூலதன மானியம் வழங்கப்படும். இவ்வாறு தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் 6 சதவிகித வட்டி மற்றும் மானியத்துடன் உடனடியாக கடனுதவி வழங்கும்.

• INOX நிறுவனம் மூலம் ஓசூரில் திரவ ஆக்சிஜன் கூடுதலாகத் தயாரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

• சிக்கில்சால் (SICGILSOL) நிறுவனம் ரூபாய் 100 கோடி செலவில் ராணிப்பேட்டையில் உள்ள தனது ஆக்சிஜன் தயாரிக்கும் நிறுவனத்தினை விரிவுபடுத்த உத்தேசித்துள்ளது.

• தற்போது ஒடிசாவிலிருந்து தமிழகத்திற்கு ஆக்சிஜன் பெறப்பட்டு வருகிறது. அங்கு வீசிய புயல் காரணமாக தொடர்ந்து ஆக்சிஜன் பெறப்படுவதில் தாமதம் ஏற்படும் நிலையில், உடனடியாக மகாராஷ்டிராவிலிருந்து ஆக்சிஜன் வழங்க வேண்டி ஒரு அவசரக் கடிதத்தை நான் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களுக்கு எழுதினேன். அக்கடிதத்தை தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்கள் நேரில் சென்று வழங்கி, தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்ய வேண்டுகோள் விடுத்தார்.

அதனை உடனடியாக ஏற்று, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் அவர்கள் தமிழகத்திற்கு கூடுதல் ஒதுக்கீட்டை வழங்கிட உத்தரவாதம் அளித்துள்ளார். இப்படி ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நீக்க பெருமளவிலான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான ஆக்சிஜன் இருப்பு உள்ளதை உறுதி செய்திருக்கிறோம். இன்னொரு பக்கத்தில் மருத்துவ உள்கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகளையும் அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

“இது விடுமுறை காலம் அல்ல; கொரோனா காலம் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!

இத்தகைய சூழலில் கடந்த 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரையிலான முழு ஊரடங்கு காலம் முடிய இருக்கிறது. கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா என்று கேட்டால், குறைந்துள்ளதே தவிர கட்டுக்குள் இன்னும் வரவில்லை என்றே தான் சொல்ல முடியும். முழு ஊரடங்கு பிறப்பிக்கும் போது பொதுமக்களின் நன்மைக்காக சில தளர்வுகளை நாம் அறிவிக்கிறோம். தேவையான மளிகை, காய்கறிகளை வாங்கிக் கொள்வதற்காக மட்டுமே அந்தத் தளர்வுகளை அறிவித்தோம்.

ஆனால் அந்தத் தளர்வுகளைப் பயன்படுத்தி அவசியமில்லாமல் வெளியில் சுற்றுவதும் சிலருக்கு வழக்கம் ஆகிவிட்டது. இப்படி வருபவர்களை அறிவுரை சொல்லி அனுப்பி வையுங்கள் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டோம். அத்தகைய அன்பான அறிவுரைகளையும் சிலர் கேட்பதாகத் தெரியவில்லை. முழு ஊரடங்கு என்பது பொதுமக்களின் நன்மைக்காகத் தான் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்களின் உயிர்களைக் காக்கவே, பாதுகாக்கவே போடப்பட்டுள்ளது. அதனை உணராதவர்களாக பொதுமக்களில் சிலர் இருப்பது வேதனை தருகிறது. முழு ஊரடங்கை சிலர், ஏதோ விடுமுறைக் காலம் என்பதாக நினைத்து ஊர் சுற்றி வருகிறார்கள். இது விடுமுறைக் காலம் அல்ல, கொரோனா காலம் என்பதை உணராமல் இன்னமும் சிலர் இருக்கிறார்கள்.

“இது விடுமுறை காலம் அல்ல; கொரோனா காலம் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!

‘கொரோனாவை வாங்கிக் கொள்ளவும் மாட்டேன் - கொரோனாவை அடுத்தவருக்கு கொடுக்கவும் மாட்டேன்’ என்று பொதுமக்கள் உறுதி எடுத்துக் கொண்டால் மட்டும் தான் இந்த நோய் தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இதனை உணர்த்துவதற்காகத் தான் பல்வேறு திரையுலகக் கலைஞர்களை வைத்து விழிப்புணர்வு வீடியோக்களைத் தயாரித்து பொதுமக்களுக்குச் சொல்லி வருகிறோம்.

கொரோனா குறித்த பயம், பொதுமக்களின் பேச்சில் தெரிகிறது. ஆனால் அது செயலில் தெரிய வேண்டும். அத்தகைய எச்சரிக்கை உணர்வை இன்னமும் பொதுமக்களிடம் விதைத்தாக வேண்டும். கடந்த ஓராண்டு காலத்தில் விலைமதிப்பில்லாத மனித உயிர்களை இழந்துள்ளோம். இதனால் எத்தனையோ குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக ஆகி உள்ளது.

இத்தகைய இழப்புகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். கடந்த ஓராண்டு காலத்தில் நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் அடைந்துள்ள துன்ப துயரங்கள் அளவில்லாதது. ஏராளமான மருத்துவர்களை நாம் இழந்துள்ளோம். மருத்துவத்துறையே மிகப்பெரிய மனரீதியான நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது.

தங்களது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு இதற்கு மேலும் சுமையை, அழுத்தத்தைக் கொடுக்க முடியாது. கொரோனா காரணமான மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பவர்கள் பள்ளி - கல்லூரி மாணவ, மாணவியர்கள்.

அவர்களுக்கு விடுமுறை என்பது மகிழ்ச்சிக்குரிய காலமாக இருந்தது, இப்போது மிகப் பெரிய துன்பம் தருவதாக மாறிவிட்டது. மன அழுத்தம் கொண்டவர்களாக அவர்கள் மாறிவிடக் கூடும். இன்னும் எத்தனை மாதங்கள் பள்ளி, கல்லூரிகளை மூடி வைத்திருக்க முடியும்? அவர்களுக்கு விரைவில் கல்வியையும் எதிர் காலத்தையும் உருவாக்கித் தந்தாக வேண்டும்.

“இது விடுமுறை காலம் அல்ல; கொரோனா காலம் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!

இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு, இங்கு வருவதற்கு முன்பாக, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினேன். அதில் அவர்களது ஒருமித்த கருத்தாக, தளர்வுகளற்ற ஊரடங்கினை முழுமையாக, தீவிரமாக அமல்படுத்தினால் மட்டுமே, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த இயலும் என்று ஆலோசனை வழங்கினார்கள்.

மாவட்டங்களில் நான் மேற்கொண்ட பயணங்களின் போதும், இதே கருத்து பரவலாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது.எனவே, மேற்படி சூழ்நிலையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்த முடிவினை அரசு எடுக்க வேண்டியுள்ளது. நோய்த் தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஏற்கெனவே உங்கள் அனைவரது ஆலோசனைகளையும் பெற்று, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே, தற்போதைய நிலையில், காலத்தின் அருமை கருதி, வருகை புரிந்திருக்கும் உறுப்பினர்கள், ஊரடங்கு குறித்த தங்களது மேலான கருத்துகளை மட்டும் குறிப்பாகத் தெரிவிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories