தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை அதிகரித்து வருவதைத் தடுக்கும் வகையில், அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, மருத்துவமனைகளில் படுக்கை, ஆக்சிஜன் வசதிகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரமாக்கியுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய கொரோனா சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டு வருகிறது.
இன்று கூட சேலத்தில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இந்நிலையில், தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தைத் தமிழக அரசு குறைத்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் அறிவிப்பில், "தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கு ரூ.1200 லிருந்து 900 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதுவே முதல்வர் காப்பீடு அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ.800லிருந்து ரூ.550 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், குழுவாக சென்று கொரோனா பரிசோதனை செய்பவர்களுக்கு ரூ.600லிருந்து, ரூ.400 ஆக குறைக்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு சென்று ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டால் மேற்குறிப்பிட்ட தொகையுடன் கூடுதலாக ரூ.300 வசூலித்துக் கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.