தமிழ்நாடு

“வெற்றிதான் பெறவில்லை; ஆனால் கோவை மக்களுக்கு பாகுபாடின்றி உறுதுணையாக இருப்பேன்” - கார்த்திகேய சிவசேனாபதி!

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாக இருந்து கோவை மாவட்ட மக்களுக்கு பணியாற்ற இயலவில்லை என்பதில் எனக்கும் வருத்தம் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

“வெற்றிதான் பெறவில்லை; ஆனால் கோவை மக்களுக்கு பாகுபாடின்றி உறுதுணையாக இருப்பேன்” - கார்த்திகேய சிவசேனாபதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தேர்தல் முடிவுகள் குறித்து தி.மு.கழகத்தின் சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “கோவை மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளில் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்பதற்காக நம் மாவட்டத்தை உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களின் பகுதியாகச் சித்தரித்துப் பல கருத்துகளை வெளியில் பேசியும், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் வருவதைப் பார்க்க முடிகிறது. வெற்றி கிட்டவில்லை என்பதற்காக நம் மக்களையும், நம் மாண்பினையும் நாமே குறை கூறுவது என்பது நாம் கொண்ட கொள்கைகளுக்கு அழகல்ல.

கோவை மாவட்ட மக்கள் கழகத்துக்கு அளித்த வாக்குகளின் எண்ணிக்கை - 8,27,240 (38.99%) எதிர்க்கட்சிக்கு அளித்த வாக்குகளின் எண்ணிக்கை - 9,53,776 (44.95) கிட்டத்தட்ட 6% வாக்குகள் தான் வித்தியாசம். இவ்வாறு குறைந்த அளவே வித்தியாசம் இருக்கும் போது இது போன்ற அவதூறு பேச்சுகள் நமக்கு வாக்களித்த இத்தனை லட்ச மக்களையும் சேர்த்து இகழ்ச்சிக்கு உள்ளாக்கும் என்பதை அனைவருமே மனதில் கொள்ள வேண்டும்.

அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள், பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், கட்சியில் இருப்பவர்கள் என அனைவரும் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் நமது தலைவர் அவர்கள் உட்பட அனைவருமே ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளின் மேல் உரிய மதிப்பும் அதை அனைவரும் பின்பற்றிட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் மக்கள் பணியாற்றியவர்கள். அவர்கள் வழியை நாமும் பின்பற்றுவோம்.

அந்த வகையில், இதை நமக்கான சவாலான பணியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். நமது கொள்கைகள், சித்தாந்தங்கள், நமது சாதனைகள், தேர்தல் அறிக்கைகள் இவற்றை மக்களிடையே கொண்டு செல்வதில் ஏற்பட்டுள்ள தடை, சுணக்கம் இவற்றைக் கண்டறிந்து அதை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைத் துவங்கிட வேண்டும்.

கடந்த பத்தாண்டுக் கால ஆட்சியில் தமிழகத்தின் நிலை, மாநில உரிமை, மக்கள் அடைந்துள்ள இன்னல்கள் பற்றி எடுத்துக் கூறி அதிலிருந்து விடுபட்டு நம் மக்கள் பயன் அடைவதற்கான திட்டங்களை வகுத்து அதனைச் செயல்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம். அதுவே நம் முதற்பணி.

இது தவிர, மேலும் தொண்டாமுத்தூர் தொகுதிக்கென பல வளர்ச்சிப் பணிகள், விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாடு, FARM TOURISM, நீராதாரத்தை மேம்படுத்துதல் போன்ற பல திட்டங்களையும் முன்னெடுத்து அனைத்திலும் வேலை செய்து தொகுதியை மேம்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தோம்.

ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாக இருந்து கோவை மாவட்ட மக்களுக்கு பணியாற்ற இயலவில்லை என்பதில் எனக்கும் வருத்தம் உள்ளது. தொகுதியில் வெற்றி பெறவில்லை என்றாலும் கோவை மாவட்ட மக்களுக்குத் துணையாக இருந்து அவர்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றுவேன்.மேலும், வரும் காலங்களில் கழகத்தை இங்கே பலப்படுத்தும் பணிகளில் ஒன்றிணைந்து பாடுபடுவோம்.

எனவே, கழகத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் எதிர்த்து வாக்களித்தவர்கள் என்ற பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் தலைவர் அவர்கள் தான் முதல்வர். தமிழகத்தின் அனைத்து பிரிவு மக்களையும் அரவணைத்துச் செல்லும் ஒற்றுமை மிகுந்த ஓர் சிறப்பான ஆட்சியாக இருக்கப்போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எனவே, நம்மால் இயன்ற அளவு கொங்குப் பகுதி மக்களின் தேவைகளைக் குறிப்பாகக் கோவை மாவட்ட மக்களின் கோரிக்கைகளைத் தலைவர் அவர்களிடம் கொண்டு சென்று அதனை நிறைவேற்றப் பாடுபடுவோம். தலைவரின் கட்டளைக்கு இணங்க இப்பகுதியின் வளர்ச்சிப் பணிகள் நிறைவேற நாம் துணை நிற்போம். ஒன்றிணைந்து செயல்படுவோம்.

(குறிப்பு: மக்களின் பார்வைக்காகக் கோவை மாவட்ட தொகுதிகளின் தேர்தல் குறித்த புள்ளிவிவரத்தை இணைத்துள்ளேன். நம் மக்கள் கழக வேட்பாளர்களையும் வெற்றிக்கு அருகில் கொண்டு சேர்த்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது)” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories