தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன்படி தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 88,937 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த தேர்தலில் மாநிலம் முழுவதும் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் 74.26 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. கடந்த தேர்தலை காட்டிலும், இந்த தேர்தலில் வாக்குப்பதிவு 1.49% குறைந்ததற்கு, தேர்தல் ஆணையம் முறையாக வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்காததே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த தேர்தலில் வாக்களிக்க இருந்த 6 கோடியே 28 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், அரசியல் கட்சியினர் யாரும் வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, தேல்தல் நடைபெறுவதற்கு 10 நாட்களுக்கு முன்பே தமிழகத்தில் வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கும் பணி நடைபெற்றது. ஆனால் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நேற்று முன்தினம் வரை பூத் சிலிப் வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்தது. பின்னர் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு உடனடியாக பூத் சிலிப் வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். ஆனால் பெரும்பாலான வீடுகளுக்கு கடைசி வரை பூத் சிலிப் கிடைக்கவில்லை என பொது மக்கள் புகார் கூறுகின்றனர்.
கொரோனா பரவல் அதிகமாக இருப்பாதல், கடந்த தேர்தலைவிட, இம்முறை தமிழகத்தில் கூடுதலாக 22 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் வாக்காளர்களுக்கு முறையாக பூத் சிலிப் வழங்காததால், எந்த வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்ற குழப்பம் ஏற்பட்டது. இதனால் பலர் வாக்களிக்காமல் இருந்துள்ளனர்.
குறிப்பாக, சென்னை மக்கள் எந்த வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்று தெரியாமல் தவித்ததாக தேர்தல் ஆணையம் மீது புகார் தெரிவித்தனர். சென்னையில் பலருக்கும் பூத் சிலிப் கிடைக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதனால்தான் சென்னையில் 59 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த தேர்தலை காட்டிலும், இம்முறை 2 சதவீத வாக்குகள் குறைந்ததற்கு, தேர்தல் ஆணையத்தின் அலட்சியமே காரணம் என்றும், ஆளுங்கட்சிக்குச் சாதகமாகப் பொதுமக்களுக்கு பூத் சிலிப் வழங்குவதில் தேர்தல் ஆணையம் குளறுபடி செய்திருக்கிறது என அரசியல் விமர்சகர்களும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.