திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட புதுராமகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் சாந்தி. இவர் நேற்று மாலை 2 .30 மணியளவில் தனது வாக்கினை பதிவு செய்ய அதே பகுதியில் உள்ள 276ஏ வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார்.
இவரது வாக்கு முன்பே பதிவு செய்யப்பட்டதால் இவருக்கு வாக்களிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டார். இது தொடர்பாக வாக்குச்சாவடி முகவர்கள் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
இதனையடுத்து மண்டல அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர், சாந்தியின் ஆவணங்களை ஆய்வு செய்து 49 பி பிரிவின் கீழ் வாக்களிக்க ஏற்பாடு செய்தார்.
இதனையடுத்து 17பி படிவம் கொடுக்கப்பட்டு அவருக்கு வாக்கு சீட்டு மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்தனர். இதனையடுத்து அவர் தனது வாக்கினை பதிவு செய்தார். முன்னதாக இவரது போலி ஆவணங்களை பயன்படுத்தி ஓட்டு பதிவு செய்த நபர் குறித்து அறிய முடியவில்லை என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இந்த மையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் கள்ள ஓட்டு பதிவு செய்த நபர் குறித்து அறிய முடியாத சூழல் ஏற்பட்டது. சர்கார் திரைப்பட பாணியில் முன்னதாக செலுத்தப்பட்ட கள்ள வாக்கினை எதிர்த்து பெண் ஒருவர் 49பி பிரிவின் கீழ் தனது வாக்கினை செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.