மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் நேற்று சென்னையில் நடந்த INDIA TODAY CONCLAVE SOUTH 2021 என்கிற நிகழ்ச்சியில் ஆற்றிய உரை வருமாறு :-
பெட்ரோல் விலையில் 5 ரூபாயும், டீசல் விலையில் 4 ரூபாயும், சமையல் எரிவாயு (கேஸ்) விலையில் 100 ரூபாய் மானியமும் அறிவிக்கக்கூடிய தைரியம் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒருவருக்கு மட்டும்தான் உள்ளது. நாட்டின் நிதியமைச்சருக்கு பெட்ரோல், டீசல் எரிவாயு விலை மீதான உயர்வை குறைப்பதற்கான அனைத்து அதிகாரமும் இருந்த போதிலும் அவர் அதை குறைக்காமல் ஜி.எஸ்.டி வரிகளை காரணம் காட்டியும் மாநில அரசின் மீதும் பழி போடுகிறார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள போதும் ஏன் மத்திய அரசால் பெட்ரோலின் விலையை குறைக்க முடியவில்லை? கொரோனா பெருந்தொற்று நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், வேலை இழந்தவர்களுக்கும் உதவாமல் பத்தாயிரம் (10000) கோடியில் புதிய நாடாளுமன்றம் கட்டுகின்றனர்
விலை உயர்வுக்கு காரணமான மோடி!
சென்னையில் பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகளில் பெண்களுக்கு சமையல் எரிவாயு இலவசமாக வழங்கியவர் மோடி என்று பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்று சமையல் எரிவாயு விலை உயர்வு மூலமாக அவர்களின் கண்ணீருக்கு காரணமாக விளங்குகிறார் பிரதமர். இன்று பி.ஜே.பி. அரசு ஊடகங்களை சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை. கடந்த நான்கரை ஆண்டுகளாக பி.ஜே.பிதான் அ.தி.மு.க.வின் வாயிலாக தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது. நரேந்திர மோடி ஊழலுக்கு எதிரானவர் என்று சொல்லிக் கொள்கிறார், பின் எப்படி மத்திய பிரதேசத்திலும் புதுச்சேரியிலும் ஆட்சியை கவிழ்த்தனர், இதற்கெல்லாம் இவர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது, ஒரு வேளை ரிசர்வ் வங்கி இவர்களுக்கென்று தனியாக பணம் அச்சிட்டு வழங்குகிறதோ என்னவோ?
கிட்டத்தட்ட 35 ஆயிரம் கோடி கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கு என்று ஒதுக்கப்பட்ட நிலையில் வெறும் இரண்டு நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி அளித்து, பிற நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்காதது ஏன்? இந்தப் பணம் எந்த ஒரு அமைச்சருக்கும் செல்லவில்லை என்பதற்கான உறுதியை பி.ஜே.பி. அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இந்த கேள்வியை நான் பாராளுமன்றத்திலும் எழுப்பி இருக்கிறேன். மக்கள் தனியார் மருத்துவமனையில் தங்களது சொந்தப் பணம் கொடுத்து தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் போது, அதற்கான ரிப்போர்ட்டில் (சான்றிதழில்) எதற்காக நரேந்திர மோடி அவர்களின் படம்?
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் நீட் தேர்வை ரத்துசெய்வோம். நாங்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் எங்கள் மீது இந்தியைத் திணிக்க முயலாதீர்கள்., தற்போது இந்தி மொழியோடு சேர்த்து சமஸ்கிருதத்தையும் சேர்த்து திணிக்க முயல்கின்றார்கள்.
தமிழை பி.ஜே.பி. அரசு ஆட்சி மொழியாக்க மறுப்பு!
2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி வெறும் 22 ஆயிரம் மக்களே தங்களது தாய்மொழி சமஸ்கிருதம் என்று கூறுகின்றனர், அந்த மொழிக்கு கிட்டத்தட்ட 800 கோடிக்கு நிகராக செலவு செய்து உள்ளார்கள். ஆனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்கு வெறும் 20 கோடிகள் மட்டுமே செலவு செய்கின்றனர். தற்போது தேர்தலை முன்னிட்டு பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பலரும் தமிழ் மொழியில் பேசுகின்றனர். இவர்கள் ஏன் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக அறிவிக்க மறுக்கின்றனர். இவர்கள்தான் இந்து, இவர்கள்தான் இந்தியன் என்று சான்றிதழ் வழங்கும் அதிகாரம் எதுவும் பி.ஜே.பி. அரசுக்கு வழங்கப்பட்டுள்ளனவா?
இவர்கள் யார் மக்களைப் பார்த்து இந்து மதத்திற்கு எதிரானவர்கள், இவர்கள் இந்தியர்கள் அல்ல என்று கூறுவதற்கு? இது திராவிட மண் பெரியார் அண்ணா கலைஞர் வழியில் வந்தவர்கள் நாங்கள், நீங்கள் தவறு செய்யும் போது நிச்சயம் அதை நாங்கள் எதிர்த்து கேள்வி கேட்போம். முந்தைய நாட்களில் எண்ணற்ற மக்களால் கோவிலுக்குள் நுழைய முடியாது, திராவிட முன்னேற்றக் கழகம்தான் அனைத்து மக்களும் கோவிலுக்குள் செல்ல வழிவகை செய்தது, திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புவது அனைவருக்கும் சமமான உரிமை. சமத்துவம். இன்று மற்ற நாடுகளை விட தமிழகத்தில்தான் அதிகம் படித்தவர்கள் உள்ளார்கள், இதற்கு திராவிட தலைவர்களும் அவர்கள் கொண்டு வந்த இட ஒதுக்கீடும்தான் காரணம்.
ஆனால் இன்று பி.ஜே.பி. அரசு வெறும் 3 சதவீதம் உள்ள உயர் வகுப்பினருக்கு பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்ற பெயரினால் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. பி.ஜே.பி. அரசு தேர்தல் நேரங்களில் மதங்களின் பெயரால் மக்களுக்குள் பிளவை ஏற்படுத்த முயற்சி செய்கின்றது. தமிழகத்தில் இதுவரை ஒருபோதும் இந்து, கிறிஸ்தவர், முஸ்லீம் என்ற பாகுபாடும் பிரச்சினைகளும் இருந்ததுமில்லை, இனி இருக்கப்போவதுமில்லை, வருகின்ற தேர்தலில் மக்கள் அவர்களுக்கு அதை நிரூபிக்கும் வகையில் பி.ஜே.பி.யையும் கூட்டணியில் உள்ள அ.தி.மு.கவினரையும் வீட்டிற்கு அனுப்ப போகிறார்கள்.
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தெளிவான கூட்டணி!
தி.மு.க.வும் காங்கிரசும் மிகத்தெளிவாக உள்ளனர், மதவாத சக்தியான பி.ஜே.பி. எந்த காரணத்தினாலும் தமிழகத்தில் உள்ளே நுழைந்து விடக்கூடாது என்பதில். காங்கிரஸ் தலைவரும் அதை நன்கு உணர்ந்திருக்கிறார், எனவே எங்களது தொகுதி பங்கீட்டில் எந்தவித பிரச்சினையும் இல்லை.. எனவே அதை பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. 2019 தேர்தலில் தமிழகத்திலும் கேரளாவிலும் ஒரு இடத்தில் கூட பி.ஜே.பியினால் வெற்றி பெற முடியவில்லை, இந்தத் தேர்தலிலும் அதுவே தொடரும். மக்கள் இந்த ஆட்சியின் மீது வெறுப்பில் உள்ளனர். ஒரு ஆட்சி மாற்றத்தை கட்டாயம் விரும்புகின்றனர்.
கடந்த தேர்தலில் கூட நாங்கள் வெறும் 1.1 சதவீதத்தில்தான் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தோம்.. இருப்பினும் திராவிட முன்னேற்றக் கழகம் ஜனநாயகத்தை போற்றக் கூடியது, மக்களின் முடிவை ஏற்றுக் கொண்டோம். பி.ஜே.பி. அரசைப் போல் ஆட்சியை கலைக்க திராவிட முன்னேற்றக் கழகம் எந்த சூழ்ச்சியிலும் ஈடுபடவில்லை. வாரிசு அரசியலை பற்றி பேசும் பி.ஜே.பி. அரசு,. முதலில் தங்களை திரும்பி பார்த்து கொள்ளட்டும்,. ராஜஸ்தான் மாநிலத்தில் பி.ஜே.பி. கட்சியை சார்ந்தவர்கள் மூன்று தலைமுறைகளாக அரசியலில் ஈடுபட்டுள்ளனர், இது வாரிசு அரசியல் இல்லையா? கிட்டத்தட்ட 19 பேர் கர்நாடகத்தில் வாரிசு அரசியல் செய்கிறார்கள், நிதி அமைச்சரின் தந்தை இமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சர், தற்போது நாடாளுமன்றத்தில் மேனகா காந்தியும் அவரது மகன் வருண் காந்தியும் ஒரே அவையில் அமர்ந்துள்ளனர்,.
பி.சி.சி.ஐ.யில் முன்பு அமித்ஷா தற்போது அவரது மகன், இன்னும் இதுபோல் பல விஷயங்களை என்னால் கூறமுடியும்,,. தற்போது தி.மு.க. சரியான பாதையில் செல்கிறது, வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் தேர்தல் அறிக்கை, இவையெல்லாம் பார்த்து எப்படி தி.மு.க.விற்கு அவப்பெயர் உண்டாக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் செய்யும் கீழ்த்தரமான அரசியல் தான் இது. கொள்கை ரீதியாக இவர்களால் (பி.ஜே.பி.யால்) ஒருபோதும் விவாதிக்க முடியாது.
தி.மு.க. நிச்சயம் சொல்வதைச் செய்யும்!
தற்போது மக்களுக்கு கட்டாயமாக ஒரு மாற்றம் தேவைப்படுகிறது, அந்த மாற்றம் தி.மு.க.தான் என நம்புகிறார்கள்.. கடந்த 2006 தேர்தலில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது, தி.மு.க. நிச்சயம் சொல்வதை செய்யும் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. பெட்ரோல் விலையில் 5 ரூபாயும், டீசல் விலையில் 4 ரூபாயும் சமையல் எரிவாயுவிற்கு மானியம் ஆக 100 ரூபாயும், கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 4000 ரூபாயும், தமிழகத்தில் ஒரு தொழிற் புரட்சியும் நிச்சயம் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வழங்குவார்.
குருமூர்த்தி ரஜினியை அரசியலுக்கு கொண்டு வரவேண்டும் என்று வகுத்த திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. எனவே அதை சரி செய்ய எதையாவது உளறிக் கொண்டிருக்கிறார்.. தமிழக மக்கள் அவருக்கும் பி.ஜே.பி.க்கும் சரியான பாடம் புகட்டுவார்கள். கமலஹாசன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் இருப்பினும் அவருக்கு இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான எந்த வாய்ப்புகளும் இல்லை. கமலஹாசன் பி.ஜே.பி.யின் ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ரஜினிகாந்தை போல் சூப்பர் ஸ்டாராக இல்லாத போதிலும் மக்கள் பலரால் நேசிக்க கூடியவர் கமலஹாசன் எனக்கும் அவரை தனிப்பட்ட முறையிலும் ஒரு நடிகனாகவும் பிடிக்கும், ஆனால் அரசியலில் மிகக் குறுகிய காலகட்டத்திலேயே அவர் தன் நிலைகளை பலமுறை மாற்றிக்கொண்டுள்ளார்.
ஏனெனில் அவர் பி.ஜே.பி.யின் கட்டளைக்கு ஏற்ப செயல்படுகிறார். உங்களுக்கு நன்றாகத் தெரியும் ரஜினிகாந்தை யார் அரசியலில் ஈடுபட வைக்க முயற்சி செய்தார்கள் என்று, ஒரு கட்டத்தில் கமல்ஹாசன் தங்கள் கட்சியை ரஜினி கட்சியோடு இணைந்து கொள்ள தயாராக இருந்தார் .
பி.ஜே.பி.யை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்!
திருமதி சசிகலா ஊழல் குற்றத்திற்காக சிறைக்கு அனுப்பிய பெருமையை பி.ஜே.பி. அரசு உரிமை கொண்டாடியது, ஆனால் அதே பி.ஜே.பி. அரசு தான் திருமதி சசிகலாவை அ.தி.மு.கவோடு இணைப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டது. எவ்வளவு கேவலமான செயல். பி.ஜே.பி. அரசுக்கு பயம் ஏற்பட்டுவிட்டது இங்கே சசிகலா பிரச்சாரத்திற்கு சென்றால் அவர்களது வெற்றி வாய்ப்பு பறிபோய் விடுமோ என்று எனவே தங்களது அணிகளான என்.ஐ.ஏ மற்றும் இன்ன பிற அரசு அமைப்புகளின் உறுதுணையோடு மிரட்டி பணிய வைத்துள்ளார். திருமதி சசிகலாவை பி.ஜே.பி. அரசு வெறும் 2 சதவீத மக்களைக் கொண்டு மொத்த தமிழ்நாட்டையும் அடக்கியாள நினைக்கிறது, இதை தமிழக மக்கள் ஒரு போதும் அனுமதிக்கமாட்டார்கள். அதை இந்த தேர்தலிலும் நிரூபிப்பார்கள்.* இந்தியா டுடே நிகழ்ச்சியின் வாயிலாக பிரதமருக்கும் உள் துறை அமைச்சருக்கும், நிதியமைச்சர் அவர்களுக்கும், மற்ற அனைத்து பி.ஜே.பி. அமைச்சர்களுக்கும் ஒரு வேண்டுகோளை வைத்துக்கொள்கிறேன், தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழில் பேசாமல், அனைத்து நாட்களிலும் தமிழ் மொழியில் பேசுங்கள், தமிழோடு சேர்த்து மொத்தம் 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளையும் ஆட்சி மொழியாக அறிவியுங்கள்.