தமிழகத்தில் அடுத்தமாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. மேலும் தி.மு. கஉள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வாக்காளர்களுக்குப் பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், அ.தி.மு.க - பா.ஜ.கவினர் போட்டிப் போட்டுக்கொண்டு பழனி, மதுரை என பல்வேறு தொகுதிகளில் வாக்காளர்களுக்குப் பரிசு பொருட்களை தாராளமாக விநியோகம் செய்து வருகின்றனர்.
அ.தி.மு.க - பா.ஜ.கவினர் பரிசு பொருட்கள் வழங்குவதைத் தடுக்காமல் தேர்தல் அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருவதாக எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், பழனி தேவாங்கூர் தெருவில், பா.ஜ.க நகர துணைத் தலைவர், சித்ராமணி வீடு வீடாக சென்று பரிசுப்பொருட்கள் விநியோகம் செய்துள்ளார். இதுகுறித்து புகைப்பட ஆதாரங்களுடன் தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் தி.மு.கவினர் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியத்துடன் இருந்து வருகின்றனர்.
இது குறித்து தி.மு.கவினர் கூறுகையில், "பாரதிய ஜனதா கட்சியின் நகர துணைத் தலைவர் சித்ராமணி, வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்குப் பரிசுப்பொருள் வழங்கியுள்ளார். இது தொடர்பாகக் கேட்டபோது தாங்கள் ஆளுங்கட்சி என்பதால் இவ்வாறு பரிசுப்பொருட்கள் கொடுப்போம். உங்களால் என்ன செய்ய முடியும் என மிரட்டுகின்றனர்.
இது குறித்து, வி.ஓ. அலுவலகத்தில் புகார் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆளும் கட்சிக்கு சாதமாக இருந்து வருகின்றனர்" என தெரிவித்துள்ளனர்.