புதுச்சேரியில், பா.ஜ.க - என்.ஆர்.காங்கிரஸ் இடையேயான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தன்னை முதலமைச்சராக அறிவிக்காததால், கொதிப்படைந்த என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் பா.ஜ.க கூட்டணியை விட்டு விலகி, தனித்துப் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நம்பிக்கை கோரும் தீர்மானத்தில், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் தோல்வி அடைந்தது. இதனையடுத்து, பா.ஜ.க - அ.தி.மு.க - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டது.
இந்த அணியின் சார்பாக, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதலமைச்சர் ஆவார் என எதிர்பார்த்த நிலையில், பா.ஜ.க மேலிடம் இதனை தவிர்க்கும் விதமாக, புதிதாக பொறுப்பேற்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை மூலமாக குடியரசு தலைவர் ஆட்சிக்கு வழி ஏற்படுத்தியது.
இதனையடுத்து புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. இந்தச் சூழலில், கடந்த 26ந் தேதி புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. புதுச்சேரியில் அரசியல் கட்சிகள் தேர்தலை முன்னிட்டு, சுறுசுறுப்பாக வேலைகளை துவங்கிய நிலையில், கூட்டணிக் கட்சியான என்.ஆர்.காங்கிரஸை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை பா.ஜ.க வேட்பாளர் ஆசை காட்டி, தங்கள் முகாமிற்கு இழுத்துச் சென்றது.
கோவை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் (10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்), முன்னாள் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த் (வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை பெற்றவர்) ஆகிய பிரமுகர்கள் பா.ஜ.கவில் சேர்ந்தனர்.
இதனால் கடுப்பாகிப்போன ரங்கசாமி பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் முதலமைச்சர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும், தனது கட்சிக்கு 18 இடங்கள் வேண்டும் என்ற கோரிக்கைகளையும் பா.ஜ.க மேலிடம் மறுத்துள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் ரங்கசாமி இந்த முடிவை எடுத்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பா.ஜ.கவின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த ரங்கசாமி நேற்று திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்திவிட்டு தனது ஆஸ்தான ஜோதிடர்களின் முடிவின்படி தனித்து போட்டியிட்டு பா.ஜ.கவுக்கு தகுந்த பாடத்தினை கற்பிக்கப்போவதாக தனது ஆதரவாளர்களிடம் கூறியிருக்கிறார் ரங்கசாமி.
மேலும், பா.ஜ.கவை நம்பி நாம் மோசம் போய்விட்டோம்; இனியும் அவர்களை நம்பி ஏமாற நான் தயாராக இல்லை. எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று புலம்பி வருகிறோம். ரங்கசாமி தனித்து போட்டியிடுவதாக வெளியான தகவல் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் புதுச்சேரியில் பா.ஜ.கவின் ஆட்சி அமைக்கும் கனவு கானல் நீராகி உள்ளது.