அலுவலக நேரத்தில் தூங்கினால் மேலதிகாரியிடம் இருந்து பாட்டு வரும் என்ற காலமெல்லாம் போய், தற்போது தூங்குவதையே வேலையாக பார்க்கக் கூடிய காலமாக மாறிவிட்டது.
அவ்வகையில், Wake Fit என்ற பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, தூக்கத்தின் மீது அதீத காதலைக் கொண்டுள்ளவர்களுக்காகவே சிறப்பான வேலை வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அது என்னவெனில், இந்த வேலைக்காக விண்ணப்பித்து தேர்வாகும் நபர்கள் 100 நாட்களுக்கு தினமும் இரவில் 9 மணிநேரம் தூங்க வேண்டும். இந்த வேலையில் சேர்வோருக்கு வேக் ஃபிட் நிறுவனமே மெத்தை, தலையணை, போர்வை உள்ளிட்டவற்றோடு ஸ்லீப்பிங் ட்ராக்கரும் அளிக்கும்.
இந்த வேலைக்கான ஒரே கண்டிஷன், தூங்கும் அனைவரும் பைஜைமா அணிந்தே தூங்க வேண்டும். படுத்ததும் 10 முதல் 20 நிமிடங்களுக்குள் தூங்கிவிட வேண்டும். தூக்கத்தின் போது எந்த போன் அழைப்புகள் வந்தாலும் எடுக்கக் கூடாது. அதாவது ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க வேண்டும்.
அவ்வாறு 100 நாட்களும் சிறப்பாக தூங்கி முடித்தால் அவர்களுக்கு இறுதியாக ரூ.1 லட்சம் சம்பளமாக வழங்கப்படும் என்றும் வேக் ஃபிட் நிறுவனம் அறிவித்துள்ளது.
தூக்கமின்மையை போக்கும் வகையில் வேக் ஃபிட் நிறுவனம் மெத்தைகளை உருவாக்கி வருகிறது. தூக்கத்திற்கு தீர்வு காணும் நிறுவனமாக உள்ளதால் இந்த போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது வேக் ஃபிட்.
தூங்குவதற்கு நீங்கள் ரெடியா?