நோட்டுக்கும், சீட்டுக்கும் தன் கொள்கைகளை பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அடகு வைத்துவிட்டார் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் சாடியுள்ளார்.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மீதான விமர்சனங்களை முன்வைத்து சேலத்தில் செய்தியாளர் சந்திப்பில் வேல்முருகன் பேசுகையில், "மத்திய அரசிடம், தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் அ.தி.மு.க அரசு காவு கொடுத்து வருகிறது. வன்னியர்களுக்கு 15 சதவீதம் உள் ஒதுக்கீடு கேட்டு பல்வேறு வன்னியர் சங்கங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகின்றன.
ஆனால், பா.ம.க நிறுவனருக்கு இது பற்றியெல்லாம் அக்கறை இல்லை. பணத்துக்காகவும். சீட்டுக்காகவும் தன் கொள்கைகளை அ.தி.மு.க- விடம் அடகு வைத்துவிட்டார். மேலும், அவரின் கல்வி நிறுவனங்கள், வன்னியர் நல வாரிய சொத்துக்களுடன் சேர்ந்து விடாமல் இருக்கவே ராமதாஸ் பா.ஜ.க, அ.தி.மு.க-வுடன் கைகோர்த்து இருக்கிறார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, எடப்பாடி பழனிசாமியை ‘டயர் நக்கி’ என்று கடுமையாக விமர்சனம் செய்தவர் ராமதாஸ். ஆனால், தற்போது, அதை மறந்துவிட்டு, தன் தேவைக்காக அ.தி.மு.க- வுடன் சேர்கிறார். எனவே, வரும் சட்டமன்ற தேர்தலில் பாசிச பா.ஜ.க - அ.தி.முக. கூட்டணியை தோற்கடித்து, மக்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க தி.மு.க ஆட்சி அமைய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.