நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் மகராஜன், இவர் தனது நண்பர்கள் மணிகண்டன் மற்றும் அருண் உள்ளிட்ட மூன்று பேருடன் சேர்ந்து, கடந்த மாதம் நடைபெற்ற திருமணம் ஒன்றின்போது மது அருந்தியுள்ளார். அப்போது இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிறன்று மணிகண்டன் மற்றும் அருண் ஆகியோர் மகராஜனுக்கு போன் செய்து நெல்லை சந்திப்பில் உள்ள கைலாசபுரத்திற்கு வருமாறு கூறியுள்ளனர். இதையடுத்து மகராஜனும் அங்கு சென்றுள்ளார். அப்போது நண்பர்கள் மூன்று பேரும் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மகராஜன் அரிவாளால் வெட்டப்பட்ட சி.சி.சி.டி காட்சி வெளியாகியுள்ளது. இதில், மகராஜனை தோள் மீது கைபோட்டு அழைத்து வரும் நண்பர் ஒருவர், திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டுகிறார். பிறகு மற்றொருவரும் சேர்ந்து வெட்டுகிறார். இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத மகராஜன், அரிவாள் வெட்டு வாங்கியவாறு அங்கிருந்து தப்பி ஓடுகிறார். பின்னர் அரிவாளால் வெட்டிய மூன்று பேரும் நிதானமாக இருசக்கர வாகனத்தில் ஏறி அங்கிருந்து செல்கின்றனர்.
இதையடுத்து, சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலிஸார் மூன்று பேரையும் கைது செய்தனர். விசாரணையில் கைதான மூன்று பேரும் கஞ்சா வியாபாரிகள் என்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில், பயங்கர வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், குற்றங்களைக் கட்டுப்படுத்தாமல் அ.தி.மு.க அரசும், போலிஸாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகவும், தமிழகமே குற்றவாளிகளின் கூடாரமாக மாறிவிட்டதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.