திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களை ஒரு பெட்டியில் போட்டு, சீல் வைத்து சாவியை எடுத்துக்கொண்டார்.
தொடர்ந்து, ஆட்சிக்கு வந்த 100 நாள்களுக்குள் பொதுமக்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அவர் உறுதியளித்தார். முன்னதாக, மனு கொடுத்தவர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களின் கோரிக்கையை நேரடியாகக் கேட்டறிந்தார்.
அப்போது பேசிய ஆரணியைச் சேர்ந்த எழிலரசி என்ற பெண், சிலிண்டர் விபத்தில் தங்களது வீடு இடிந்து, தனது தாய் இறந்துவிட்ட நிலையில், தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை இன்னும் கிடைக்கவில்லை என்றும், தற்போது தானும், சகோதரரும் நடுத்தெருவில் நிற்பதாகவும் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து, எழிலரசிக்கு ஆறுதல் தெரிவித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வருவதற்குள்ளேயே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டும் என உறுதியளித்தார்.
இந்நிலையில், உடனடியாக அவருக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசிய எழிலரசி, “தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என் மனுவைப் பெற்று, இதற்குத் தீர்வு கிடைக்கும் எனத் தெரிவித்தார். அதுபோலவே என் கணக்கில் ரூ. 2 லட்சம் அரசு சார்பில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் ஐயாவுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த காணொளியை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “திருவண்ணாமலையில் தாயை இழந்த பெண் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்வில் மனு கொடுத்திருந்தார்.
உடனடியாக தி.மு.க. உதவும் என உறுதியளித்தேன். பதறிய அரசு 2 லட்ச ரூபாயை வழங்கியிருக்கிறது. தி.மு.க.விடம் கேட்டால்தான் அரசின் காதுகளில் விழுகிறது! நாளை அமையும் தி.மு.க அரசு கேட்காமலும் உதவும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.