“பெருந்தலைவர் காமராஜர் பள்ளிக் கல்விக் கொடுத்து தமிழர்களுக்குக் கண் கொடுத்தார், கலைஞர் அவர்கள் உயர்கல்வி கொடுத்து எழுந்து நடக்க வைத்தார், அந்தவழியில், தமிழர்களின் கண்ணீரைத் துடைக்கும் ஆட்சியை நான் நடத்துவேன்” என வேலூர் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
இன்று (30-01-2021) காலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், வேலூர் மத்திய மாவட்டம், பள்ளிக்கொண்டான் டோல்கேட் அருகில் – கந்தனேரி ஊராட்சியில் நடைபெற்ற, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.
“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம் வருமாறு:
“வேலூர் மத்திய மாவட்டக் கழகத்தின் சார்பில், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற இந்த நிகழ்ச்சியை ஒரு மாநாடுபோல் ஏற்பாடு செய்திருக்கும் மாவட்டக் கழகச் செயலாளர் அவர்களுக்கு முதலில் என்னுடைய வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அவர்களுக்கு துணை நின்று பணியாற்றிய அனைவருக்கும் தலைமைக் கழகத்தின் சார்பில் வணக்கத்தையும், வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் வரும் போது எந்த இடையூறுமின்றி, சிரமமின்றி வந்து சேர்ந்திருக்கிறீர்கள் அல்லவா… இந்த செய்தியைக் கேள்விப்பட்டு நீங்களாகத்தான் வந்திருக்கிறீர்கள் அல்லவா… உங்களை யாரும் கட்டாயப்படுத்தி வர வைக்கவில்லை அல்லவா…
இங்கு நுழைகின்றபோது நம்முடைய தோழர்கள் நுழைவாயிலில் உங்கள் பெயரைப் பதிவு செய்து, நீங்கள் கொடுத்த மனுக்களை வாங்கிக்கொண்டு, பதிவு செய்ததற்கு ரசீது ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும். ஒருவேளை பதிவு செய்யாமல் வந்திருந்தால் தயவு செய்து உங்கள் மனுக்களை, கோரிக்கைகளை இந்த கூட்டம் முடிந்து செல்லும்போது, உங்கள் மனுக்களை கொடுத்துவிட்டு, ரசீதை தயவு செய்து வாங்கிச்செல்லுங்கள்.
அது இருந்தால் நாளைக்கு என்னை நீங்கள் கேள்வி கேட்கலாம். இப்போது இந்த நிகழ்ச்சியில் அனைவரையும் பேசவைக்க வாய்ப்பு இல்லை. அது உங்களுக்கும் தெரியும்.
அதுமட்டுமில்லாமல் உங்களது தனிப்பட்ட பிரச்சினைகள் - உள்ளூர் பிரச்சினைகள் - கிராமப் பிரச்சினைகள் - தெருப் பிரச்சினைகள் இது போன்ற பிரச்சினைகளைத்தான் பேசப்போகிறீர்கள்.
உதாரணமாக குடிநீர்ப் பிரச்சினை, தெருவிளக்குப் பிரச்சினை, சுகாதார சீர்கேடு பிரச்சினை, பேருந்து வசதி, பள்ளிக்கூடம், மருத்துவமனை, பட்டாப் பிரச்சினை, ஓய்வூதியப் பிரச்சினை - இவ்வாறு உங்கள் ஊரில் இருக்கும் பிரச்சினைகளைத் தான் அதிகம் பேசப் போகிறீர்கள்.
அதனால் அனைவரையும் பேச வைப்பதற்குப் பதிலாக 10 பேரை பேச வைக்க முடிவு செய்துள்ளோம். உங்கள் மனுக்கள் அனைத்தும் இந்த பெட்டிக்குள் வந்து சேர்ந்துவிட்டன. இந்த பெட்டியில் இருந்து 10 பேரை நானாக தேர்ந்தெடுக்கப்போகிறேன். தயவுசெய்து பெயர்களை எடுத்துச் சொன்னவுடன் அவர்கள் எழுந்து தங்கள் கருத்துகளைச் சுருக்கமாக பேசலாம்.”
இவ்வாறு தி.மு.க தலைவர் தொடக்கவுரை ஆற்றினார்.
‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்வை நிறைவு செய்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை விவரம் வருமாறு:
“மீண்டும் ஒருமுறை என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு 15 பேர் உங்கள் கருத்துகளைச் சொல்லி இருக்கிறீர்கள். அதற்கு முடிந்தவரையில் நான் பதில் சொல்லியிருக்கிறேன்.
பொதுவாக சில செய்திகளை உங்களிடம் சொல்ல நான் விரும்புகிறேன். இந்த மாவட்டத்தை பொறுத்தவரையில் அமைச்சராக இருப்பவர் கே.சி.வீரமணி. அவர் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு எந்த நன்மையும் செய்வதற்கு முன்வரவில்லை. அவருடைய சுயநலத்திற்காகவும், சொத்துகள் சம்பாதிப்பதற்காகவும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
4 ஆண்டுகளுக்கு முன்னர், மத்திய வருமான வரித்துறை, அமைச்சர் வீரமணி வீட்டிலும், அவருடைய பினாமி வீடுகளிலும் 31 இடங்களில் சோதனை நடத்தினார்கள். இடங்களை வளைத்துப் போட்டு, மிரட்டி அதனை விலைக்கு வாங்குவதில் வீரமணி மிகவும் கெட்டிக்காரர். அதனை முழுநேரத் தொழிலாகவே செய்து கொண்டிருக்கிறார்.
வேலூரின் மையப்பகுதியில் ஒரு இடத்தை வளைக்கும் தகராறில் இவரே நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று உயர் நீதிமன்றம் வரை வழக்கு சென்றிருக்கிறது.
நிலம் தொடர்பான விவகாரத்தில் அமைச்சராக இருக்கும் வீரமணியின் தலையீடு தனிப்பட்ட முறையில் இருப்பதாகவும், அமைச்சர் என்கிற அடிப்படையில் இல்லை என்ற காரணத்தினாலும், அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள அந்தப் புகாரில் நடவடிக்கை எடுக்க அரசின் அனுமதி தேவையில்லை என்று இந்த வழக்கை விசாரித்த நீதியரசர்கள் தீர்ப்பு வழங்கினார்கள். இதுதான் இந்த அமைச்சர் வீரமணியின் மாபெரும் புகழ்.
நிலவிவகாரத்தில் வீரமணி சிக்கிய வீடியோவும் வெளியானது. தன்னுடைய கல்லூரியை கட்டுவதற்காக, மணல் கொள்ளைகள் நடத்தியது, ஏலகிரி பெப்சி குடோன் வாங்கியதில் நடைபெற்ற சட்ட ஒழுங்கு அத்துமீறல்கள் இவையெல்லாம் பொது மக்களுக்கு நன்றாக தெரியும்.
பதவி பிரமாணத்தில் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழிக்கு விரோதமான காரியங்களை பட்டவர்த்தனமாக செய்வதில் மிகத் தேர்ந்தவராக வீரமணி இருக்கிறார். இதுதான் அவருடைய மிகப்பெரிய சாதனை.
இந்த தொகுதியை பார்க்கும் போது பல பிரச்சினைகள் இருக்கின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் தரத்தையும் உறுதிப்படுத்த இயலாத நிலையில்தான் இந்த அரசாங்கம் சென்றுகொண்டிருக்கிறது.
அணைக்கட்டு தொகுதியில் மலைப்பாங்கான கிராமங்களில் சாலை வசதி ஏற்படுத்தித் தரவில்லை. காவனூரில் இரயில்வே பாலம் அமைத்து தரவில்லை. கே.வி.குப்பம் தொகுதியில் குடிநீர்ப் பிரச்சினை மிகவும் மோசமான நிலையில் இருந்து கொண்டிருக்கிறது.
கூட்டுக் குடிநீர் திட்டத்தின் முதல் திட்டத்தை தி.மு.க அரசு நிறைவேற்றியது. 2ஆம் திட்டத்தை இந்த ஆட்சி நிறைவேற்ற முன்வரவில்லை. குடியாத்தம் மற்றும் கே.வி.குப்பம் ஆகிய இடங்களில் மருத்துவ வசதிகள் போதுமானதாக இல்லை. கால்நடை மருத்துவமனைகள் கேட்ட மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
இந்த மாவட்டத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் வேலையின்மை காரணத்தினால் இங்கிருந்து பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு குடி பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த மாவட்ட அமைச்சர் வீரமணி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு எந்த நன்மையும் செய்து தரவில்லை. இதுதான் இன்றைய நிலை.
உங்கள் கோரிக்கை மனுக்கள் எல்லாம் இந்தப் பெட்டியில் போடப்பட்டுள்ளன. உங்கள் முன்னால் இந்தப் பெட்டியை பூட்டி அதற்கு சீல் வைக்கப் போகிறேன்.
அதன்பின் இந்தப் பெட்டியை நான் நமது ஆட்சி அமைந்த அடுத்த நாள், இந்த சீல் உடைக்கப்பட்டு, பெட்டி திறக்கப்படும். இதற்கென தனி நிர்வாகம் உருவாக்கப்படும். அந்த நிர்வாகத்தின் மூலமாக மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு, 100 நாட்களில் இந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்து கையில் மனுக்களோடு இந்த அரங்கத்தை நோக்கி வந்திருக்கும் தமிழ்மக்கள் அனைவருக்கும் என்னுடைய இதயபூர்வமான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்தவர் நம்பிக்கையைப் பெறுவது தான் ஒரு மனிதனின் மாபெரும் சொத்து. இவர் நல்லவர், நம்பிக்கையானவர், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார், இவரை நம்பி நம்முடைய கோரிக்கையை வைக்கலாம் - என்று உங்களிடம் நான் நம்பிக்கையைப் பெற்றதைத் தான் என்னுடைய சொத்தாகக் கருதுகிறேன். இத்தகைய நம்பிக்கையைப் பெறுவது சாதாரணமான விஷயம் அல்ல!
நீங்கள் எத்தகைய நம்பிக்கையை வைத்துள்ளீர்களோ, அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்!
உங்களுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் 100 சதவீதம் உண்மையாக இருப்பேன் என்ற வாக்குறுதியை முதலில் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்!
மக்கள் குறைகளை அறியும் இந்த பயணத்தை நான் நேற்று காலையில் திருவண்ணாமலையில் நடத்தினேன். மாலையில் ஆரணிக்கு சென்றுவிட்டு இன்று இந்த வேலூருக்கு வந்திருக்கிறேன்.
வேலூர் நகரத்தில் நேற்று மாலை மாநகரக் கழகத்தின் சார்பில், நம்மை ஆளாக்கிய நம்முடைய ஒப்பற்ற தலைவர் - வங்கக் கடலோரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் - அறிவுலக மேதை - பேரறிஞர் அண்ணாவின் சிலை மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களால் நமக்கு உருவாக்கித் தரப்பட்ட நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைகளைத் திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அதனை நான் பெருமையாகக் கருதுகிறேன். வேலூர் மாநகரத்தில் அதனை திறந்து வைத்திருப்பது மிகவும் பொருத்தமான ஒன்று.
ஏனென்றால் வேலூர் என்பது விவேகம், வீரம், சுதந்திரம், விடுதலையின் அடையாளம் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட வேலூரில் உங்களையெல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
“சொன்னதைச் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம்” என்று முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னதுபோல அவர் வழியில் இந்த ஸ்டாலினும், சொன்னதைத்தான் செய்வான், செய்வதைத்தான் சொல்வான்.
அந்த அடிப்படையில் தான், கழக ஆட்சி அமைந்து 100 நாட்களில் மக்களுடைய குறைகளைத் தீர்ப்பேன் என்ற வாக்குறுதியை நான் உங்களுக்கு கொடுத்திருக்கிறேன். தமிழகம் முழுவதும் மக்களிடம் இருந்து வாங்குகிற மனுக்களை, கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசின் சார்பில் ஒரு தனி வாரியம் நிச்சயமாக உருவாக்கப்படும்.
அந்தத் துறையின் மூலமாக மாவட்ட ரீதியாக பரிசீலித்து உடனடியாக அதனை நிறைவேற்றித் தருகின்ற வாக்குறுதியை தமிழக மக்களுக்கு நான் மீண்டும் மீண்டும் தருவதற்கு காத்திருக்கிறேன். தொகுதி வாரியாக முகாம்கள் அமைத்து இந்த பிரச்சினைகள் குறித்து நேரடியாக விசாரணை நடத்தி நிறைவேற்றித் தருவோம்.
அதாவது அ.தி.மு.க அரசு செய்யத் தவறிய கடமைகளை தி.மு.க அரசு நிச்சயமாக செய்து கொடுக்கும். இந்த கடமையை தி.மு.க அரசு நிறைவேற்றி முடிக்கும்.
அதை முடிக்கிறபோது தமிழகத்தில் 1 கோடி மக்கள் பிரச்சினைகள் தீரும் அளவிற்கு நிச்சயமாக அமையும் என்று நான் உறுதியோடு குறிப்பிட விரும்புகிறேன். 1 கோடி குடும்பங்களுக்கு ஏற்பட்ட கவலைகள், துன்பங்களிலிருந்து நிச்சயமாக அவர்கள் மீண்டிருப்பார்கள் என்பதை பேரறிஞர் அண்ணா மீது ஆணையிட்டு, நம்முடைய தலைவர் கலைஞர் மீது ஆணையிட்டு, ஏன் தமிழ்நாட்டு மக்கள் மீது ஆணையிட்டு நான் உறுதி எடுத்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
தந்தை பெரியார் அவர்கள் பெருந்தலைவர் காமராஜரோடு எந்தளவு பாசத்தோடு பழகி கொண்டிருந்தார் என்பதும் உங்களுக்கு தெரியும். அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்கள் காமராஜரைப் பார்த்து அடிக்கடி பச்சைத் தமிழர் என்று தான் அழைப்பார்கள்.
தமிழகம் முழுவதும் ஏராளமான பள்ளிகளைத் திறந்து, ஏழை, எளிய மாணவர்கள் அனைவரும் படிக்க பாதை அமைத்துக் கொடுத்தவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள். முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களை நமக்குக் கிடைத்த பொக்கிஷம் என்று சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள்.
அந்தவகையில், தலைவர் கலைஞர் ஆட்சி காலத்தில்தான் ஏராளமான கல்லூரிகள் திறக்கப்பட்டன. காமராஜர் தமிழர்களுக்கு கண் கொடுத்தார். கலைஞர் தமிழர்களை எழுந்து நடக்க வைக்க வேண்டும் என்று சொன்னார், தந்தை பெரியார்.
அந்த வரிசையில் தமிழர்களின் கண்ணீர் துடைக்கும் ஆட்சியை நான் நடத்துவேன் என்ற அந்த உறுதியை தரும் நிகழ்ச்சிதான் இந்த நிகழ்ச்சி.
கல்வி கொடுத்தோம். அதனோடு சேர்த்து தகவல் தொழில்துறைக்கு புதிய உத்வேகம் கொடுத்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கினோம்.
ஆனால் கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க அரசு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. இதனால் இளைய சக்தி வீணாகச் சென்றுவிட்டது. கழக ஆட்சி புதிய வேலைவாய்ப்புகளை நிச்சயம் உருவாக்கும்.
தமிழர்களை தன்னிறைவு பெற்ற மனிதர்களாக மாற்றும் ஆட்சியாக அமையும் என்று உறுதி மொழியை நான் அழுத்தம் திருத்தமாக இந்த வேலூரில் நடைபெறும் இந்த கூட்டத்தின் மூலமாக தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் பின்வாங்கியதில்லை.
ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் ரத்து என்று சொன்னார். அதை செய்தார் தலைவர் கலைஞர். அவர்கள் கோட்டைக்கு செல்வதற்கு முன்பே பதவியேற்ற மேடையிலேயே 7,000 கோடி ரூபாய்க் கடனை ரத்து செய்தவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.
அதேபோல அனைவருக்கும் கலர் டி.வி என்று அறிவித்தார். சொன்னவாறே அனைவருக்கும் கலர் டி.வி.யை கொடுத்தார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதியம் நிறைவேற்றித் தருவேன் என்று அறிவித்தார். அதேபோல நிறைவற்றித் தந்தார் கலைஞர் அவர்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்தார். அதையும் கொடுத்தார். இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்தார். அதையும் முடித்துக் கொடுத்தார். அந்த வரிசையில் நானும் கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவேன்.
நாடாளுமன்றத் தேர்தலின்போது நான் கொடுத்த வாக்குறுதிகளை இன்றைக்கும் நான் மறக்கவில்லை.
மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை ரத்து செய்வோம் என்று அறிவித்தேன். கூட்டுறவு வங்கிகளில் இருக்கும் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன்களை இரத்து செய்வோம் என்று அறிவித்தேன். அதேபோல விவசாயக் கடனை ரத்து செய்வோம் என்று அறிவித்து இருக்கிறேன்.
இவ்வாறு கடன்களை ரத்து செய்வதன் மூலமாக அரசாங்கம் கடனில் மூழ்கிவிடும் என்று சிலர் சொல்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்கிறேன், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடனை ரத்து செய்கிறபோது, மத்திய அரசை நோக்கி இந்த கேள்வியை கேட்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
அப்பாவி மக்களுக்கு உதவி செய்தால் மட்டும் இலவசமா? கொடுக்கலாமா? கடனை ரத்து செய்யலாமா? என்று கேட்கிறார்கள். ஏழைகள் வாங்கிய கடனை ரத்து செய்வது என்பது கடன் ரத்து அல்ல, அவர்களுடைய வாழ்க்கையிரல் ஒளியேற்றுவதற்கான வாய்ப்பு. அதைத்தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இலவச திட்டங்கள் என்பது கவர்ச்சித் திட்டங்கள் அல்ல. அவை மக்களுடைய அடிப்படை வாழ்க்கை தரத்தை முன்னேற்றும் திட்டங்கள். மக்களுடைய வாழ்க்கையில் ஒளியேற்றுவதைத் தான் திராவிட முன்னேற்ற கழக அரசு செய்யும்.
கடந்த 10 ஆண்டு காலத்தில் தமிழகம் எல்லாத் துறையிலும் எல்லா வகையிலும் அதலபாதாளத்துக்கு போய்விட்டது. இந்த அ.தி.மு.க. ஆட்சியில் எந்தத் தரப்பு மக்களுக்கும் நிம்மதியாக இல்லை. எந்தத் தொகுதிக்கும் எந்த புதிய திட்டங்களும் இல்லை. முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் தொகுதிகள் கூட கேவலமாக இருக்கின்றன. மக்களின் அடிப்படைத் தேவைகளை இவர்கள் தங்கள் தொகுதிக்குக் கூடச் செய்து தரவில்லை!
மக்கள் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க தி.மு.க.வால் தான் முடியும் என்ற நம்பிக்கையுடன் கோரிக்கை மனுக்களை இன்று வழங்கியிருக்கிறீர்கள். மக்களின் தேவைகளை நிறைவேற்றித் தருவேன் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் மக்களை நான் சந்திக்கிறேன்!
மக்களின் அரசாக - மக்கள் விரும்பும் அரசாக - மக்கள் கவலைகளைப் போக்கும் அரசாக - திராவிட முன்னேற்றக் கழக அரசு அமையும்!
இந்த அரசாங்கம் தான் வரப்போகிறது என்ற நம்பிக்கையுடன் நீங்கள் கொண்டுவந்த பாரங்களை, இப்போது என் முதுகில் ஏற்றி விட்டீர்கள். என்னை நம்பி ஏற்றி வைத்திருக்கிறீர்கள். நீங்கள் நம்பிக்கையுடன் செல்லுங்கள்!
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தான் அமையும் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் இந்தக் கோரிக்கையை வைத்துள்ளீர்கள். உங்கள் கவலைகள் யாவும் தீரும்! என்ற வாக்குறுதியை மீண்டும் நான் வழங்குகிறேன்.
இந்த சிறப்பான நிகழ்ச்சியை மாநாடு போல ஏற்பாடு செய்து நடத்திக்காட்டியிருக்கும் வேலூர் மத்திய மாவட்டச் செயலாளர் நந்தகுமார் உள்ளிட்ட மாவட்டக் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள் அத்தனை பேருக்கும் மீண்டும் ஒருமுறை என்னுடைய இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.”
இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவுரை ஆற்றினார்.