தூத்துக்குடி மாநகரப் பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக, நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. பல பகுதிகளிலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாடாளுமன்ற தி.மு.க குழு துணைத் தலைவரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி நேரில் பார்வையிட்டார்.
முதலில் என்.ஜி.ஓ காலனி பகுதியில் வீடுகளை சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தை பார்வையிட்டார். தொடர்ந்து அந்த மக்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்தார். தொடர்ச்சியாக சிதம்பர நகர், பிரையன்ட் நகர், மாசிலாமணிபுரம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி, “தொடர்ந்து மழை பெய்து மாநகரம் முழுவதும் மழைநீர் தேங்கி வருகிறது. இதற்கான எந்த விதமான முன்னேற்ற நடவடிக்கைகளையும் முறையான பணிகளையும் தமிழக அரசும் மாநகராட்சி நிர்வாகமும் செய்யவில்லை.
இதற்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும். மேலும் தூத்துக்குடி மாநகரில் அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்கள் எந்தவொரு முறையான திட்டமும் இல்லாமல், தடுப்புச்சுவர் மாதிரி கட்டி வைத்த காரணத்தால் தான் பல பகுதிகளில் தண்ணீர் வெளியேறாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
ஆட்சியில் இருப்பவர்களின் மெத்தனப்போக்கின் காரணமாகவே தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. எனவே தூத்துக்குடி நகருக்கு நிரந்தர தீர்வாக, மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு விரைவில் வரக்கூடிய தி.மு.க ஆட்சியில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என தெரிவித்தார்.