தமிழ்நாடு

“கார்ப்பரேட் கும்பலுக்காகவே இயங்கும் மோடி அரசு” - விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் தலைவர்கள் பேச்சு!

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு காத்திருப்புப் போராட்டம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்றது.

“கார்ப்பரேட் கும்பலுக்காகவே இயங்கும் மோடி அரசு” - விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் தலைவர்கள் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 40 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாகவும், விவசாயிகள் போராட்டத்திற்கு வலுசேர்த்திடவும், தமிழக விவசாயிகளின் ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் வகையிலும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு காத்திருப்புப் போராட்டம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., சி.பி.ஐ.எம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசன், வி.சி.க தலைவர் திருமாவளவன் எம்.பி., ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல்சமது, SDPI கட்சி தமிழ்நாடு தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் பங்கேற்று மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், “வேளாண் சட்டத்தின் மீது மோடி ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறார் என மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.

கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் விவசாய சட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். அவருக்கு இருக்கும் தைரியம் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க ஆட்சியில் ஒருவருக்கும் இல்லை.

விவசாய சட்டங்களை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து தி.மு.க வலியுறுத்தியது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது, நீதிபதிகள் உண்மையை புரிந்து இந்த சட்டங்களை ஆராய்ந்து முறியடிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

சி.பி.ஐ.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “விவசாயிகளின் நியாயமான போராட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். தமிழ் நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா? அடக்குமுறைகளை எல்லாம் தவிடுபொடியாக்கிய வரலாறு விவசாயிகளுக்கு உண்டு. வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியில் உள்ள கூட்டணி கட்சி வெளியேறுகிறது. ஆனால் இங்கே கூட்டணி பேசுகிறார்கள்.” என விமர்சித்தார்.

வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், “விவசாயிகளின் இந்தப் போராட்டம் அனைத்து மக்களுக்குமானது. மோடியின் உண்மை முகத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

தான்தோன்றித்தனமான ஜி.எஸ்.டி உள்ளிட்ட சட்டங்களை போல இந்த வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளனர். ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் சட்டங்களை நிறைவேற்றியுள்ளனர்.

பெரும்பான்மை இந்து சமூகத்தைச் சேர்ந்த இந்த மண்ணில் அனைத்திலும் பெரும்பான்மையான சமூகம் தான் ஆதிக்கம் செலுத்தும். அந்த வகையில் வேளாண் சட்டத்தால் இந்துக்கள் பாதிக்கப்படுவார். இதனை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மடாதிபதிகள் கண்டிக்க வேண்டாமா?

இந்த வேளாண் சட்டங்களால் பயன் பெறப்போவது கார்ப்பரேட் கம்பெனிகள் தான். கார்ப்பரேட் கும்பலுக்கான அரசாக மோடி அரசு இயங்கி வருகிறது” என்றார்.

சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், “விவசாயிகளுடன் 7 சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அங்கு வைக்கப்பட்ட தண்ணீரை கூட விவசாயிகள் தொடவில்லை. விவசாயிகளின் பேச்சுவார்த்தை குழு உறுதியாக உள்ளது. சட்டத்தை திரும்ப பெறுவாயா மாட்டாயா என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

ஆனால் வேளாண் சட்டத்தை திரும்பப்பெற முடியாது என்பதில் அரசு மூர்க்கத்தனமாக உள்ளது. போராடும் விவசாயிகளின் மீது மனிதாபிமான மற்ற முறையில் அடக்குமுறையை ஏவுகிறது.

டெல்லி போராட்டக்களத்தில் தங்களை அடக்குவதற்காக ஏவப்பட்ட காவல்துறைக்கும் உணவு பரிமாறியவர்கள் விவசாயிகள். போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் தோற்றுப்போவீர்கள்” என்றார்.

ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா பேசுகையில், “அடம்பிடிக்கும் மோடியை வடம் பிடித்து இழுப்பதற்காக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து போராடி கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories