நெல்லைச் சேர்ந்தவர் தொ.பரமசிவன் 70. காரைக்குடி அழகப்பா கல்லுாரியில் முதுகலை தமிழ் பயின்றவர். மதுரை பல்கலையில் இவரது முனைவர் பட்ட ஆய்வேடான ‛அழகர்கோயில்’ ஆய்வுகளுக்கான முன்னோடி நுாலாகும்.
இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லுாரி, மதுரை தியாகராஜர் கல்லுாரிகளில் தமிழ்த்துறையில் பணியாற்றியுள்ளார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழியல்துறை தலைவராக 98 முதல் 2008 வரை பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றவர்.
அறியப்படாத தமிழகம், சமயங்களின் அரசியல், நான் இந்து அல்ல நீங்கள், விடுபூக்கள், பாளையங்கோட்டை, செவ்வி உள்பட 17 நுால்கள் எழுதியுள்ளார். தமிழர்களின் பண்பாடுகள், வாழ்வியல்முறைகள் குறித்த சிறந்த பேச்சாளர்.
பல திரைப்படங்களுக்காக நடிகர் இவரது வீட்டிற்கு வந்து ஆலோசனைகள் பெற்றுச்செல்வார்கள். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று மாலை காலமானார். இறுதி சடங்குகள் இன்று நடைபெறவுள்ளது.
இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவியும், மாசான மணி என்ற மகனும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். பேரா.தொ.பரமசிவன் மறைவுக்கு தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழர் வாழ்வியல், பண்பாடு, பழக்க வழக்கத்தின் தொன்மை பற்றி இறுதி மூச்சுவரை ஆய்வு செய்தவர், திராவிட இயக்கப்பற்றாளர், தன் ஆய்வுகளை எழுத்துக்கூட்டி படிப்போர் கூட எளிதில் புரிந்துகொள்ளும்படி நூலாக்கி தந்தவர். பெரியவர் தொ.பரமசிவன் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு அதிர்ந்தேன். ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேரா.தொ.பரமசிவன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.