சென்னை வேளச்சேரி பகுதியை சார்ந்த சங்கர்கணேஷ் (27) என்பவர் அடையாறு சைபர் கிரைம் பிரிவில் புகார் ஒன்று கொடுத்தார். அந்த புகாரில் தான் பெங்களுரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும், கடந்த பிப்ரவரி மாதம் தனது திருமண தேவைக்காக வங்கியில் கடன் பெற முயற்சி செய்தபோது அப்போது ரிலையன்ஸ் நிப்பான் இன்சூரன்ஸ் என்ற பெயரில் தொலைபேசியில் தொடர்புகொண்ட பெண்மணி ஒருவர் குறைந்த வட்டியில் கடன் தருவதாகவும் அதற்கு 10 சதவீதம் இன்சூரன்ஸ் பணம் வங்கியில் செலுத்தவேண்டும் என்று கூறி தனது ஆதார் மற்றும் பேன்கார்ட் விவரங்களை பெற்றார். பின்பு லோன் ஒப்புதல் பெறப்பட்டது.
கடன் கொடுக்க இருக்கும் ரூ.40 லட்சம் பணத்தில் 10 சதவீதம் இன்சூரன்ஸ் கட்டவேண்டும் என்று கூறியதின்படி கூகுல் பே மூலம் ரூ.40 ஆயிரம் பணம் அனுப்பியதாகவும், பின்பு தொலைபேசி எண் துண்டிக்கப்பட்டதாகவும் எனவே தான் இழந்த பணத்தை பெற்றுத்தரும்படி புகார் அளித்தார். புகாரின் பேரில் அடையாறு காவல் மாவட்ட தனிப்படையினர் விசாரணை செய்ததில் ரிலையன்ஸ் நிப்பான் இன்சூரன்ஸ் நிறுவனம் போலியானது என தெரியவந்தது. எனவே புகார் தாரருக்கு வந்த தொலைபேசி எண் மற்றும் வங்கி விவரங்களை தொழில்நுட்ப உதவியுடன் ஆராய்ந்த போது சந்தோசபுரத்தில் பெரேக்கா பிஸ்னஸ் சொலியூசன் என்ற பெயரில் போலியாக கால் சென்டர் நடத்துவது தெரியவந்தது.
அங்கு சென்ற தனிப்படை போலிசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது போலி கால் சென்டர் உரிமையாளர் பிரேம்குமார் என்பவர் வங்கி கடனுக்கு முயற்சி செய்பவரின் விவரங்களை சேகரிப்பதும், தனது மனைவி பெனிசா சாரோ (23) என்பவர் மூலம் கால் சென்டரில் வேலைக்கு தேர்வான பெண்கள் மூலம் பேசவைத்து இன்சூரன்ஸ் என்ற பெயரில் பண மோசடி செய்வது தெரியவந்தது. கடந்த இரண்டு வருடங்களாக பண மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலை சேர்ந்த பெனிசா சாரோ(23), மற்றும் உடந்தையாக இருந்த ஓட்டுநர் விக்னேஷ்(23) ஆகியோரை தனிப்படையினர் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 7 ஒயர்லெஸ் லேன்ட் லைன் போன்கள், செல்போன்கள், ஒரு கார், மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது, இந்த நிலையில் தலைமறைவாக உள்ள பிரேம்குமார் மற்றும் சிலரை தனிப்படையினர் தேடிவருகின்றனர். அடையாறு காவல் மாவட்ட துணை ஆனையாளர் விக்கரமன் நடவடிக்கையால் நாமக்கல் மற்றும் கொளத்தூர் ஆகிய இரு இடங்களில் போலி கால் சென்டர்கள் கண்டறியபட்டு முடக்கப்பட்ட நிலையில் வேளச்சேரி சாலை, சத்தோசபுரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக லோன் மற்றும் இன்சூரன்ஸ் என்ற பெயரில் போலி கால்சென்டர் நடத்திவந்தது தெரியவந்தது,