சென்னையில் நகர் புயலால் பெய்த கனமழை காரணமாக நகரத்தின் பல பகுதிகள் மழைநீரில் மூழ்கின. பின்னர் வடிகால் பணிகளைத் தொடர்ந்து மழைநீர் 2 நாட்களில் வடியத் தொடங்கியது. ஆனால், சென்னை செம்மஞ்சேரி பகுதியில் ஒருவாரமாகியும் மழைநீர் வடியாததால் அப்பகுதி கடல்போல் காட்சியளிக்கிறது.
குறிப்பாக சென்னை செம்மஞ்சேரி, ஜவஹர் நகர், எழில்முகா நகர் பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையில் வீடுகளைச் சுற்றியும், செல்லும் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், இதைக் கண்டும் காணாமல் செயல்படும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டித்தும், ஏரியில் குடியிருப்பு கட்ட அனுமதியளித்த சோழிங்கநல்லூர் வட்டாட்சியரை கண்டித்தும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
மேலும் செம்மஞ்சேரி பகுதியை சுற்றியுள்ள தாழம்பூர், காரணை, ஒட்டியம்பாக்கம் போன்ற பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர் செம்மஞ்சேரி பகுதியில் சூழ்ந்து பெரிதும் பாதிப்புக்குள்ளாக்குவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.
செம்மஞ்சேரி வால்வெட்டு ஏரியில் செல்கின்ற கால்வாய்களை அடைத்து, தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கிய சோழிங்கநல்லூர் வட்டாட்சியரிடம், தமிழக அரசு உரிய விசாரணை மேற்கொண்டு அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
செம்மஞ்சேரி வழியே சோழிங்கநல்லூர், காரப்பாக்கம் சென்று மீண்டும் சோழிங்கநல்லூர், பனையூர், கானத்தூர் வழியாக சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் சென்று முட்டுகாடு படகு குழாமில் கடலில் கலக்கிறது. இதனால் மழைநீர் அதிகநேரம் தேங்குகிறது. எனவே செம்மஞ்சேரி வழியாக நேரடியாக சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் பக்கிங்காம் கால்வாயில், மழைநீர் கலக்கும்படி செய்தால் தண்ணீர் உடனடியாக வெளியேறும். தமிழக அரசு இதில் மெத்தனம் காட்டினால், அனைத்து குடியிருப்பு பகுதி மக்களையும் ஒன்றுதிரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.