உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கனரக , இலகுரக வாகனங்கள், வேன், லாரிகளில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்ணன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது போக்குவரத்து துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க எந்த ஒரு நடைமுறையும் பின்பற்றப்படுவதில்லை என்று அதிருப்தி தெரிவித்தனர். வாகனங்களின் தகுதி சான்றிதழ் பெறும்போது மட்டும் வேக கட்டுப்பாட்டு கருவியை பொருத்தி வருவதாக குறிப்பிட்டனர்.
பின்னர் அது பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து கண்காணிக்க எந்த ஒரு தொழில்நுட்பமும் இல்லை என்றும் தெரிவித்தனர். மேலும் வாகனங்களில் ஒளிரும் பட்டை, இன்டிகேட்டர் விளக்கு எதையும் முறையாகப் பயன்படுத்துவதில்லை என்றும், அதுபோன்ற வாகனங்களில போக்குவரத்து துறை அதிகாரிகள் பயணித்தால் மட்டுமே தெரிய வரும் என்றும் தெரிவித்தனர். மேலும் ஆட்டோக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
மிரர் வியூ கண்ணாடிகளை வெளியே பயன்படுத்துகின்றனர். உட்புறமாக பயன்படுத்தாமல் வெளியே பயன்படுத்தி வரும் ஆட்டோக்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்றும் கேள்வி எழுப்பினர். அப்போது போக்குவரத்து துறை சார்பில் ஆஜரான கூடுதல் செயலாளர் வேக கட்டுப்பாட்டு கருவிகளை கண்காணிக்க பறக்கும் படை உள்ளதாகவும் விதிகளை மீறிய வாகனங்கள் மீது, லட்சத்துக்கு மேற்பட்ட வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். அரசினுடைய பதிலில் எந்த ஒரு திருப்தியும் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், போக்குவரத்து துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 15ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.