"வாகனங்களுக்கு 'எப்.சி.' வழங்குவதற்கு, தனியார் நிறுவனங்கள் மூலம் போக்குவரத்துத்துறையில் ‘மெகா’ வசூலா?; லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொள்ள வேண்டும்" என தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஆர்.டி.ஓ. அலுவலகங்களுக்கு எப்.சி.க்குச் செல்லும் வாகனங்கள் எல்லாம், ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திடமிருந்துதான் “ஒளிரும் பட்டை”, “வேகக் கட்டுப்பாட்டுக் கருவி”, “ஜி.பி.எஸ். கருவி” போன்றவை வாங்கிப் பொருத்த வேண்டும்” என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டு, அதன் அடிப்படையில், போக்குவரத்துத்துறைக்குள், சில தனியார் நிறுவனங்களை அனுமதித்து, அவற்றின் மூலம் மெகா வசூல் செய்து கொண்டிருக்கும் மோசடிக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மோட்டார் வாகனச் சட்டப்படி, ஒரு வாகனம் சாலையில் ஓடுவதற்குத் தகுதி படைத்ததாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து, அதற்கு “எப்.சி.” வழங்குவதும், அந்தச் சான்றிதழ் காலாவதி ஆனதற்குப் பிறகு புதுப்பிப்பதும், மோட்டார் வாகன அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த இந்த நடைமுறையை உள்நோக்கத்துடன் தலைகீழாக மாற்றி, சில தனியார் நிறுவனங்களைக் களத்தில் இறக்கி, தன் கீழ் உள்ள போக்குவரத்துத்துறை ஆணையர் மூலம், அந்தக் குறிப்பிட்ட தனியார் நிறுவனங்கள் வழியாகவே “எப்.சி.” வழங்கிட வேண்டும் என்று அனைத்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பிடச் செய்திருப்பது, கோமாளித்தனமாக இருக்கிறது.
“ஆய்வு செய்யும் அதிகாரி அளிக்கும் சான்றிதழின் அடிப்படையில் வாகனத்திற்கு எப்.சி. வழங்க வேண்டும்” என்று மோட்டார் வாகனச் சட்டம் கூறுகிறது. ஆனால் ஊழல் செய்வதற்காக அனுப்பப்பட்ட சுற்றறிக்கையோ; ஈரோட்டிலும், சென்னையிலும் உள்ள குறிப்பிட்ட அந்தத் தனியார் நிறுவனங்களிடம் மட்டுமே ஒளிரும் பட்டை உள்ளிட்ட கருவிகளைப் பொருத்திக்கொள்ள வேண்டும் என்கிறது. அடுத்தபடியாக, பொருத்தி விட்டு அந்த நிறுவனம் அளிக்கும் தகுதிச் சான்றிதழின் அடிப்படையில் மோட்டார் வாகன அதிகாரி சான்றளிக்க வேண்டும் என்கிறது அந்த சுற்றறிக்கை. இது என்ன அரசு நிர்வாகமா? அல்லது போக்குவரத்துத்துறை அமைச்சர் நடத்தும் துக்ளக் தர்பாரா?
அப்படிச் சான்றளிக்கும் முன்பு, தனியார் நிறுவனத்தின் வெப்சைட்டிற்குச் சென்று அந்தச் சான்றிதழ் உண்மையானதுதானா என்பதை ஆன்லைன் மூலம் சரி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆர்.டி.ஓ. அலுவலக அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்கள். அரசு அலுவலகத்தில் கொடுக்கப்படும் எப்.சி.க்கு, தனியார் வெப்சைட்டில் போய் ஆன்லைனில் சரிபார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருப்பது, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களை அந்தக் குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களின் “கிளைக்கழகங்களாக” மாற்றியிருக்கும் கேடுகெட்ட நிர்வாக அணுகுமுறையாகும். “கமிஷனுக்காகவே ” செய்யப்பட்டுள்ள இந்த அதிகார துஷ்பிரயோகம், குறிப்பிட்ட அந்த அமைச்சருக்குத் தனிப்பட்ட முறையில் லஞ்சத்தைக் குவிக்கப் பயன்படலாம். ஆனால் அரசுத் துறையை, தனியார் கம்பெனிகளின் எடுபிடியாக ஆக்கியிருப்பது வெட்கக் கேடானது.
தமிழகத்தில் 12 லட்சம் கனரக வாகனங்கள் இருக்கிறது என்றால், அவை அனைத்தும், எப்.சி.க்கு தேவையான ஒளிரும் பட்டைகள் உள்ளிட்ட அனைத்துக் கருவிகளையும், இந்தச் சில தனியார் நிறுவனங்களிடம்தான் பொருத்திக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவு, ஊழல் செய்வதற்கு என்றே உருவாக்கப்பட்டுள்ள ஓர் அதிகாரபூர்வமற்ற ‘செட்அப்’ ஆகும். போக்குவரத்துத்துறை அமைச்சரின் இந்தக் கேவலமான முடிவுகளும், கேலிக்கூத்துகளும் இன்றைக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தலைப்புச் செய்தியாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசுத் துறையை, தனியார் நிறுவனத்திற்கு அடிமையாக்கும் அளவிற்கு, அந்தத் தனியார் நிறுவனங்களுக்கும் - போக்குவரத்துத்துறை அமைச்சருக்கும் அப்படி என்ன நெருக்கமான உறவு? என்ன கூட்டணி? தனியார் நிறுவனங்களிடம், இப்படியொரு ஏகபோகக் கொள்முதலுக்கு உத்தரவிட்டுள்ளதற்கு என்ன கமிஷன்? இவை முறைப்படியான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உட்படுத்த வேண்டியவை என்பதில் சந்தேகமில்லை!
டெண்டர் விட்டும் ஊழல் செய்வோம்; வழக்கமான எப்.சி.க்கு வரும் வாகனங்களைப் பயன்படுத்திக் கூட, தனியார் நிறுவனம் மூலம் நூதனமாக “கமிஷன்” வசூல் செய்வோம் என்ற ரீதியில், அமைச்சர் விஜயபாஸ்கர் போக்குவரத்துத்துறையை, தவறான வழிகளில் நடத்திச் செல்வது கடும் கண்டனத்திற்குரியது. வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளை எல்லாம், தனியார் நிறுவனங்களுக்கு ‘சல்யூட்’ அடிக்க வைத்து, அசிங்கமான - அருவருக்கத்தக்க ஒரு நிர்வாகத்தை நடத்தி வருகிறார் அமைச்சர் திரு. விஜயபாஸ்கர். தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி இந்தச் சுற்றறிக்கைகளைத் திரும்பப் பெற்றாலும்;,கருவிகள் வாங்குவதும் - தனியார் நிறுவனங்களிடமிருந்து அங்கீகாரக் கடிதம் பெற்று எப்.சி. புதுப்பிக்க வேண்டும் என்பதும், தொடருகிறது. வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளையும், வாகனங்களுக்குச் சொந்தக்காரர்களையும், இந்தக் குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தில் தான் கருவிகள் வாங்க வேண்டும் - அங்கீகாரக் கடிதம் பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதை உடனே போக்குவரத்துத்துறை அமைச்சர் கைவிட வேண்டும். தனியார் நிறுவனங்களுக்கு ஏன் இந்த உத்தரவு அளிக்கப்பட்டது, இதுவரை கமிஷன் வசூல் எவ்வளவு, மக்களின் பாதுகாப்புக்கு எதிரான விதிமுறைகளை வகுத்துக் கொடுத்தது யார் என்பது குறித்து எல்லாம் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து, உடனடியாகத் தீவிர விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். அப்படி இந்த அரசு செய்யத் தவறினால், தி.மு.கழக ஆட்சி அமைந்தவுடன் போக்குவரத்துத்துறையில் நடந்துள்ள இந்த 'மெகா வசூல்' முறைகேடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.