இந்தியாவின் மிக முக்கிய யானைகள் ஆர்வலர் அஜய் தேசாய் காலமானார். பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் சிறந்த ஆராய்ச்சியளாராக 1980களில் முதுமலைக் காடுகளில் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர் அஜய்தேசாய்.
மேலும் அஜய்தேசாய் பணியாற்றிய போது, யானைகளுக்கு ரேடியோ காலர் பொருத்தி, அவற்றின் மோய்ச்சல் பரப்பு, வேளாண் பயிர் மேய்தல் மற்றும் யானைகளின் சமூக வாழ்க்கை முதலான கூறுகைகள் ஆராய்ந்து அறிந்தவர். மேலும் காடுகள் அழிப்பு நடவடிக்கையே,”யானைகள் விவசாய தோட்டத்திற்குள்ளேயும், நகரங்களுக்குள் நுழைவதற்கும் மிக முக்கிய காரணம்” என்ற கூற்றை விடாமல் எடுத்துரைத்தவர்.
அதுமட்டுமல்லாது, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் யானைகள் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட அஜய் தேசாய், IUCN-னின் யானைகள் நிபுணர் குழுவின் தலைவராகவும் பதவி வகித்தார்.
மேலும் தனது பணிகாலத்தின் போது, மசினங்குடி உள்ளிட்ட காட்டுப்பகுதியில் கட்டப்பட்ட கேளிக்கை விடுதிகள் மற்றும் யானைகளின் வழிதடங்களை ஆய்வு செய்ய நீதிமன்றம் அமைத்த குழுவில், இருந்து சில வாரங்களுக்கு முன்னர் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு வருவதற்கு அஜய் தேசாய் மிக முக்கிய காரணமானவர். இந்நிலையில் அவரது மறைவு இயற்கை நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே அஜய் தேசாய் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “யானைகள் ஆர்வலர் திரு. அஜய் தேசாய் மறைவெய்திய செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். மிகச் சிறந்த வன உயிரியல் பாதுகாப்பு நிபுணரை இந்தியா இழந்திருக்கிறது. அஜய் தேசாயை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், சூழலியல் ஆர்வலர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்!” எனத் தெரிவித்துள்ளார்.