கேரளாவிலிருந்து சிலர் ஹவாலா பணத்தை சென்னைக்கு கொண்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் வடக்கு கடற்கரை போலீசார் பாரிமுனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது அங்கு பேருந்து மூலமாக வந்த இருவர் மீது சந்தேகத்தின் பெயரில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் கோட்டையம் நடக்கல் ஈராட்டு பேட்டா பகுதியை சேர்ந்த முகமது அர்சத் (47) மற்றும் முகமத் ஜியாத் (46) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் பல நாடுகளைச் சேர்ந்த வனங்களையும் தாங்கள் கொண்டு வந்த பைகளில் வைத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இருவரையும் வடக்கு கடற்கரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் இருவரும் கேரள மாநிலம் கோட்டையம் பகுதியில் இருந்து ரயில் மூலம் சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் பின்னர், பெரம்பூர் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து மூலமாக பாரிமுனை பேருந்து நிறுத்தத்திற்கு வந்து இறங்கி உள்ளனர்.
மேலும் அவர்கள் கொண்டு வந்தது ஹவாலா பணம் என்பதும், அந்தப் பணத்தை மன்னடி தம்பு செட்டித் தெருவில் உள்ள மெட்ரோ பேலசின் உரிமையாளர் ஜமால் மற்றும் சாதிக் என்பவர்களிடம் கொடுப்பதற்காக இங்கு வந்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்து அவரிடமிருந்து வெளிநாடுகளைச் சேர்ந்த டாலர், சவுதி ரியால், குவைத் தினார், கத்தார் ரியால், ஓமன் ரியால், யூரோ உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 25 லட்சத்து 37 ஆயிரத்து 552 ரூபாயை முகமது அர்சத் இடமிருந்தும் மற்றும் 33 லட்சத்து 83 ஆயிரத்து 107 ரூபாய் முகமது ஹியாத் இடமிருந்தும் என இந்திய ரூபாய் மதிப்பில் மொத்தம் 59 லட்சத்து 20 ஆயிரத்து 659 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட அவர்களிடம் இந்தப் பணம் யார் மூலமாக அவர்களுக்கு வந்தடைந்து என்ற கோணத்திலும் இதில் வேறு யார் யார் தொடர்பில் உள்ளார்கள் என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.