சென்னையில் சில மாதங்களாக கோஷ்டி மோதல் மற்றும் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, முன்விரோதம் காரணமாக அரங்கேறும் கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. முன்விரோதம் காரணமாக நடைபெறும் கொலை சம்பவங்கள் குறித்து உளவுத்துறையில் பணியாற்ற கூடிய போலிஸார் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் காவலர்களுக்கு எச்சரிக்கை வழங்குவது வழக்கம்.
அப்படி கொலைச் சம்பவங்கள் நடைபெற உள்ளதாக உளவுத்துறை பிரிவு போலிஸார், சட்டம்-ஒழுங்கு பிரிவு போலிஸாருக்கு தகவல் அளித்தும் பல இடங்களில் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாமல் கொலை சம்பவங்கள் மிகவும் எளிதாக பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் நேரத்திலேயே பெருமளவில் அரங்கேறி வருகிறது.
குறிப்பாக சில தினங்களுக்கு முன்பு அயனாவரத்தில் வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் பழிக்குப் பழியாக கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கொலையாளிகள் சிறையில் இருந்தே அரங்கேற்றி உள்ளனர். அதேபோல் மயிலாப்பூர் பகுதியில் யார் பெரிய ஆள் எனும் போட்டியில் மணிகண்டன் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவங்கள் குறித்து முன்பே உளவுத்துறை போலிஸாரால் காவல்துறைக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டதாகவும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை இருந்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு காவல்துறை வட்டாரங்களில் நிலவி வருகிறது.
குறிப்பாக சென்னையில் நடைபெறும் கொலைச் சம்பவங்கள் பெரும்பாலும், மத்திய சிறைச்சாலையிலேயே திட்டம் தீட்டப்பட்டு அரங்கேற்றப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் சென்னையில் உள்ள பெரும்பாலான காவல் நிலையங்களில் பணியாற்றக்கூடிய பெரும்பாலான போலிஸார் பணம் சம்பாதிக்கும் நோக்கில் மட்டுமே பணியைச் செய்து வருவதாகவும் காவல்துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது.
முன்பு இலைமறை காய்மறையாக நடைபெற்றுவந்த சில சம்பவங்கள் இப்போது காவல்துறையினரால் வெட்டவெளியில் நடைபெற்று வருவதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு ஆயுதப்படை காவலர் ஒருவர் கஞ்சா விற்பனையில் நேரடியாக ஈடுபட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. தற்போது சென்னை மாநகர காவல் ஆணையராக இருக்கும் மகேஷ் குமார் பொறுப்பேற்ற பின்பு சென்னையில் குற்றச் சம்பவங்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இருப்பினும், சென்னையில் கொலைச் சம்பவங்கள் தொடர்கின்றன. குற்றச் சம்பவங்களை தடுக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் காவல்துறையில் பணியாற்ற கூடிய அதிகாரிகள் உரிய முறையில் செயல்பட்டால் மட்டுமே குற்றச்சம்பவங்கள் தடுக்க முடியும். இதுபோல் சென்னையில் கொலைச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே சென்றால் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு நிம்மதியாக வெளியே நடமாட முடியாத சூழல் ஏற்படக்கூடும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.