உத்திரப்பிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டும், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் கரூரில் எம்.பி ஜோதிமணி வாயில் கருப்பு முகமூடி அணிந்து சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் தலித் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இந்தக் கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அடுத்து நாடு முழுதும் கடுமையான கண்டனம் எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கரூரில் காந்தி சிலை முன்பு சத்தியாகிரகப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
பாலியல் வன்கொடுமைக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மீது நடைபெற்ற தாக்குதலை கண்டித்தும், இந்த சத்தியாகிரக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த சத்தியாகிரக போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக இந்த சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கி உள்ள இடத்தில் ஏராளமான போலிஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.