உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் தலித் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்தக் கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட தலித் பெண்ணுக்கு நீதி கேட்டு ஆளுநர் மாளிகையை நோக்கிப் பேரணியாகச் சென்ற தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான மகளிர் அணியினர் பங்கேற்றனர். ஆளுநர் மாளிகையை நோக்கிச் சென்ற கனிமொழி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் போலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டனர். போலிஸார் அவர்களைக் கைது செய்து வேனில் ஏற்றினர்.
பேரணியில் ஈடுபட்ட மகளிர் அணியினரை கைது செய்ததைக் கண்டித்து தி.மு.கவினர் வண்டிகளை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலிஸார் கேட்டுக்கொண்டதன் பேரில் போலிஸ் வேனிலிருந்து இறங்கி வந்து தொண்டர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி, பொதுக்களுக்கு நாம் இடையூறாக இருக்கக்கூடாது எனக் கேட்டு, வாகனத்திற்கு வழிவிட அறிவுறுத்தினார். இதையடுத்து தொண்டர்கள் விலகி வழிவிட்டனர்.
இந்நிலையில், நேற்று ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற தி.மு.க மகளிரணி செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன் உள்ளிட்ட 191 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், தொற்று நோய் பரப்பகூடிய செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கிண்டி போலிஸார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
முன்னதாக தி.மு.க மகளிரணி நடத்திய ஒளி ஏந்திய பேரணியை தடுத்து, கைது செய்திருக்கிறது தமிழக காவல்துறைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருதார். மேலும் இந்த கைது நடவடிக்கை உ.பி.கொடூரத்துக்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல என்று விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் பேரணியில் சென்ற தி.மு.க மகளிரணியினர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்திருப்பதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.