தூத்துக்குடி மாவட்டத்தில் ‘உலக நாகரிகத்தின் தொட்டில்’ என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூர் மற்றும் அதன் அருகே உள்ள சிவகளை பகுதிகளில் கடந்த மே மாதம் துவங்கி தொடர்ந்து தொல்லியல் துறை மூலமாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த ஆய்வுப் பணிகளைப் நாடாளுமன்ற தி.மு.க குழு துணைத் தலைவரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
மேலும் அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப் பணிகளை அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்துகொண்டனர். இதையடுத்து அந்தப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்களை பார்வையிட்டனர். தொடர்ந்து கனிமொழி எம்.பி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது ஆவர் கூறியதாவது “தமிழ் நாகரிகத்தைச் சொல்லக்கூடிய அளவில் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை பகுதிகளில் அகழ்வாய்வுகள் நடைபெற்று வருகிறது.
இந்த அகழ்வாய்வில் பானை, வாள் போன்ற பல பொருட்கள் கிடைத்துள்ளன. அகழாய்வில் கிடைக்கப்பெற்ற பொருட்களில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. எனவே அகழாய்வில் கிடைக்கப்பெற்ற பொருட்கள் அனைத்தும் கார்பன் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் நடக்கும் அகழ்வாராய்ச்சியைத் தொடர்ந்து விரிவாக நடத்த மத்திய மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இங்கு நடைபெறக்கூடிய அகழ்வாராய்ச்சிகள் தமிழ் நாகரிகத்தின் தொன்மையை விளக்கக்கூடிய சான்றாக அமையும்” எனக் கூறினார்.
மேலும், வேறு எந்த கண்ணோட்டத்தோடும் எண்ணத்தோடும் எடுத்துக்கொள்ளாமல் ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற தொல்லியல் ஆராய்ச்சிக்கான சான்றிதழ்கள் இன்னும் வெளியிடப்படாமல் இருப்பதைப் போன்ற காலதாமதம் இனியும் நடைபெறாமல் இருக்க மத்திய மாநில அரசுகள் உதவவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை பகுதிகளில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாய்வின் போது கிடைக்கப்பெற்ற பொருட்கள் அனைத்தையும் காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.