திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் இனாம்குளத்தூர் பெரியார் சமத்துவபுரத்தில் நிறுவப்பட்டுள்ள பெரியாரின் மார்பளவு சிலைக்கு நேற்று விஷமிகள் சிலர் செருப்பு மாலை அணிந்து சாயம் பூசி அவமரியாதை செய்தனர்.
நடு இரவில் மர்ம நபர்கள், யாருக்கும் தெரியாமல் கலவரத்தை உருவாக்க திட்டமிட்டு இந்தகைய செயலில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டி, இந்த சம்பவத்திற்கு காரணமான உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்யக்கோரி அந்த பகுதியில் தி.மு.க, தி.மு, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சம்பவ இடத்திற்கு சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் பெரியார் சிலை அவமரியாதைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தி.மு.க எம்.பி கனிமொழி பெரியார் சிலையை அவமதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கனிமொழி எம்.பி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “திருச்சியில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டுள்ளது.
பெரியார் பிறந்தநாள் அன்றுதான் தமிழக பி.ஜே.பி தலைவர் முருகன், “பெரியார் சமூகநீதிக்காக பாடுபட்டவர். அவரை வாழ்த்துவதில் எங்களுக்கு தயக்கம் இல்லை” என்றார். இதுதான் அவர்கள் பெரியாருக்கு காட்டும் மரியாதையா ? நீட் , புதிய கல்விக் கொள்கை, விவசாயிகள் போராட்டம் இவற்றுக்கான உங்கள் பதில் பெரியார்தானா?” எனத் தெரிவித்துள்ளார்.