தமிழக மாணாக்கர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் வகையில் அமைந்திருக்கும் நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும், மாணவர்களும் போராடி வருகின்றனர்.
ஆயினும் இவை எவற்றையும் கருத்தில் கொள்ளாமல் மத்தியில் சர்வாதிகார ஆட்சியில் அமர்ந்திருக்கும் மோடி அரசாங்கம் நீட் தேர்வை தமிழகத்தில் திணித்து ஏழை-எளிய மக்களை முன்னேற விடாமல் சதி செய்கிறது.
இந்த சதி வேலைகளை முறியடிக்காமல் அதற்கு சாமரம் வீசும் அரசாக மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க அரசு உள்ளது. இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது.
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கவிருக்கும் தேர்வுக்காக காலை 11 மணிக்கே தேர்வு நடைபெறும் பகுதிக்கு உணவு, தண்ணீர் கிடைக்காமல் அடிப்படை வசதிகளை கூட ஏற்படுத்தி தராமல் மாணவர்களையும் பெற்றோர்களையும் அலைக்கழித்திருக்கிறது அரசு நிர்வாகம்.
அதுமட்டுமல்லாமல், வழிகாட்டு நெறிமுறைகளை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வைக்கப்பட்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் தரப்பில் கடுமையான கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மத்திய மாநில அரசுகளின் குளறுபடி நிறைந்த நீட் தேர்வு ஏற்பாடுகள் குறித்து குற்றஞ்சாட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “2 மணி தேர்வுக்குக் காலை 11 மணிக்கே வந்துவிட வேண்டும். மதிய உணவு இல்லை. தமிழ் அறிவிப்பு இல்லை. கையுறைகூட குறிப்பிட்ட நிறத்தில். வெயிலில் பெற்றோர்-கழிப்பறை வசதியில்லை. நம் பிள்ளைகள் பாஸாகி விடக்கூடாது எனும் சூழ்ச்சியே இன்றைய நீட் தேர்வு கெடுபிடிக்கான காரணம். #BanNeet_SaveTNStudents ” எனக் குறிப்பிட்டுள்ளார்.