கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடு முழுக்க இன்று நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. ஏழைகளுக்கு மருத்துவப் படிப்பை எட்டாக்கனியாக்கும் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
நீட் தேர்வு அச்சத்தால் நேற்று மட்டும் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். உயிர் குடிக்கும் நீட் தேர்வுக்கு எதிராக நாடே கொந்தளித்து வரும் நிலையில் பா.ஜ.க அரசு பிடிவாதமாக தேர்வை நடத்துகிறது.
தமிழகத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 14 நகரங்களில் 238 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.
பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் தேர்வுக்கு மாணவர்கள் காலை 11 மணிக்கே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களில் உணவு வசதி ஏற்படுத்தப்படாததால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு மத்தியில் பசியால் வாடும் நிலை ஏற்பட்டது.
மேலும் தேர்வெழுத வந்த மாணவர்களிடம் கடுமையாக கெடுபிடி கட்டப்பட்டுள்ளது. காதணி, வளையல், செயின், ஹேர் பின், ரப்பர் பேண்ட், கொலுசு உள்ளிட்டவை அணிந்து செல்ல அனுமதிக்கப்படாததால் மாணவிகள் தலைவிரிகோலத்தில் தேர்வு எழுதினர்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட முத்துலெட்சுமி எனும் தேர்வரிடம் தாலி, மெட்டி ஆகியவற்றைக் கழற்றி கொடுத்துவிட்டுச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதால் அவர் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்.
இந்துத்வத்தை தூக்கிப்பிடிக்கும் பா.ஜ.க அரசு நடத்தும் நீட் தேர்வின் காரணமாக, இந்துக்கள் புனிதமானதாகக் கருதும் தாலியையும் கழற்றும் நிலை நேர்ந்துள்ளதாக பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், தமிழகத்தின் பல இடங்களில் தகுந்த போக்குவரத்து வசதிகளின்றி மாணவர்களும், அவர்தம் பெற்றோர்களும் அவதிக்குள்ளாகினர். பல தேர்வு மையங்களில் போதுமான கழிப்பறை வசதிகளும் செய்துதரப்படவில்லை. சில இடங்களில் மழை பெய்ததால் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.
கடைசி நேரத்தில் பல்வேறு குழப்பங்களால் மாணவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர். இது மாணவர்களுக்கு உளவியல் ரீதியான நெருக்கடியை ஏற்படுத்தும் என்று பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.