நாடு முழுக்க இன்று நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. ஏழைகளுக்கு மருத்துவப் படிப்பை எட்டாக்கனியாக்கும் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
நீட் தேர்வு அச்சத்தால் நேற்று மட்டும் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். உயிர் குடிக்கும் நீட் தேர்வுக்கு எதிராக நாடே கொந்தளித்து வரும் நிலையில் பா.ஜ.க அரசு பிடிவாதமாக தேர்வை நடத்துகிறது.
இந்நிலையில், நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி நாளை காலை 8 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அறிவித்துள்ளார்.
மக்களவை சபாநாயகர் நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும், மருத்துவ ஓ.பி.சி மாணவர்களுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 50% இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்.
8 வழிச்சாலை திட்டத்தைக் கைவிட வேண்டும். புதிய கல்விக் கொள்கையைக் கைவிட வேண்டும். சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட 12 பிரச்சினைகளை உடனடியாக நாடாளுமன்றத்தில் எழுப்ப நேரம் ஒதுக்கவேண்டும் என்று வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.