தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை பகுதியை சேர்ந்த துரைமுத்து என்பவர் மீது 2 கொலை வழக்கு வழக்குகள் இருக்கும் நிலையில் அவரை கைது செய்வதற்காக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமையில் காவலர்கள் சென்றனர்.
அப்போது துரைமுத்து தப்ப முயன்றபோது காவலர்கள் தொடர்ந்து அவரை கைது செய்ய முயன்றனர். அப்போது காட்டுப் பகுதியில் இருந்த துரைமுத்து அங்கிருந்த காவலர்கள் மீது நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளார்.
நாட்டு வெடிகுண்டு வீசியதில் காவலர் சுப்பிரமணியன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பணியில் இணைந்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் சமீபத்தில் தனிப்படை பிரிவில் காவலராக பணிமாற்றம் செய்யப்பட்டு, ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான சிறப்பு படைப்பிரிவில் காவலர் சுப்பிரமணியன் இணைந்து பணியாற்றி வந்த நிலையில் வீரமரணம் அடைந்துள்ளார் காவலர் சுப்பிரமணியன்.
இந்தச் சம்பவத்தில் பலியான காவலர் சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தூத்துக்குடியில் காவலர் சுப்பிரமணியன் வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்!
அ.தி.மு.க ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல், காவலர்களின் பாதுகாப்பினை தமிழக காவல்துறை உறுதி செய்திட வேண்டும்.” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.