தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய அ.தி.மு.க அரசு, அடுத்த தலைமை யார் என்ற அதிகார போட்டியை நடத்திக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவர், செவிலியர், தூய்மைப்பணியாளர் மற்றும் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்ட வந்தவர்களிடம் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் இதுகுறித்து, தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “‘4 மாதமாக ஊதியமில்லை, பணியிட பாதுகாப்பில்லை, சரியான உணவில்லை...’
கொரோனா தடுப்பு பணியாளர்கள், தொற்றிலிருந்து மீண்டவர்களின் இக்குற்றச்சாட்டுகள் 8 மாதங்களாகியும் அடிமை அரசுக்கு கொரோனா பற்றிய புரிதல் ஏற்படவில்லை என்பதையே காட்டுகின்றன. கூடுதலாக யார் சிறந்த அடிமை என்ற போட்டி வேறு!
கொரோனாவில் கோட்டைவிட்ட அடிமைகளின் அலட்சியம் குறித்து இன்றைய காணொலிகாட்சி சந்திப்பில் இப்படி பொங்கி தீர்த்தனர் இளைஞரணி மண்டலம் 1&2ஐ சேர்ந்த மருத்துவர் - செவிலியர் - தூய்மைப்பணியாளர், தொற்றிலிருந்து மீண்ட இளைஞர்கள். இவர்கள் சொல்லும் பிரச்னைகள் நம்மை கலங்கவைக்கின்றன” எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் மற்றொரு ட்விட்டர் பதிவில், “கொரோனா தடுப்பு பணியிலுள்ள அரசு PG மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு 3 மாதங்களாக முறையாக ஊதியம் வழங்கவில்லை என புகார்கள் வருகின்றன.
உயிரைப் பணயம் வைத்து கொரோனாவை தடுக்கும் முன்கள பணியாளர்களுக்கு துரோகம் இழைக்காமல் நிலுவை ஊதியத்தை அடிமை அரசு உடனடியாக வழங்க வேண்டும்!” எனத் தெரிவித்துள்ளார்.