சமூக ஊடகங்களில் பத்திரிகையாளர்களை இழிவான வகையில் அவதூறு செய்து வரும் கிஷோர் கே சுவாமியை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபகாலமாக சமுக வலைதளங்களில் பத்திரிகையாளர்கள் , ஊடகங்கள் மீது அப்பட்டமான அறுவெறுக்கத்தக்க வகையில் அவதூறு பரப்பும் செயல்கள் அதிகரித்துள்ளன.
குறிப்பாக தனிமனித தாக்குதல்கள் மூலம் பத்திரிகையாளர்களை மிரட்டுவது தரக்குறைவாக எழுதுவது -பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர் குடும்பத்தினர் படங்களை வெளியிட்டு மன உளைச்சல் தரும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. பொய்யான பாலியல் குற்றச்சாட்டுகளை பரப்பி மிரட்டுவது ஆகிய மிக மோசமான செயல்கள் தொடர்கிறது.
பெண் பத்திரிகையாளர் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வந்த கிஷோர் கே சுவாமி என்பவர் மீது, பெண் பத்திரிகையாளர் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலிஸார் நேற்று பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் கிஷோர் கே ஸ்வாமி தலைமறைவானார்.
கிஷோர் கே சுவாமி மீது தற்போது வரை 8 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கிண்டியில் உள்ள அ.தி.மு.க பிரமுகரின் அலுவலகத்தில் வைத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, தொடர்ச்சியாக பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பரப்பி வரும் கிஷோர் கே சுவாமியை கைது செய்ய வேண்டும் என காவல்துறைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில், “கிஷோர் கே சுவாமி மீது சென்னை பெருநகர காவல்துறையினரிடம் பல பத்திரிகையாளர்கள் - பத்திரிகையாளர் அமைப்புகள் புகாரளித்தும் இதுவரை சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மிகுந்த போராட்டத்திற்கு பிறகு காவல்துறையினர் இந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யும்போது ஒரு சில அரசியல்வாதிகள் உதவியுடன் தப்பித்து வந்தார்.
இன்றைய தினம் பெண் பத்திரிகையாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அறிகிறோம். இந்த நபர் மீது இதுவரை பத்திரிகையாளர்கள் கொடுத்த அத்தனை புகார்களின் மீதும் வழக்குகள் உடனடியாக பதிவு செய்யப்பட்டு அருவருப்பான அவதூறு பேர்வழி கைது செய்யப்பட வேண்டும். சட்டப்படி உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் இதுபோன்ற அவதூறு பேர்வழிகள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பல வருடங்களாக இதைப்போன்ற அவதூறு பரப்பும் நபர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கைகள் எடுக்காததன் விளைவே இன்றைய மோசமான நிலைக்கு காரணம் என கருதுகிறோம். இனியும் இது போன்ற சமுக விரோத அவதூறு நபர்களின் அவதூறு செயல்களை வேடிக்கைப் பார்க்காமல் உடனே நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
அவதூறு பேர்வழிகளுக்கு பரிந்துரை செய்து தங்களது பெயரை எவரும் வீணாக்கிக் கொள்ளவேண்டாம் என்றும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆரோக்கியமான விமர்சனங்களை வரவேற்போம். பத்திரிகையாளர்கள் விமர்சனங்களுக்கு உட்பட்டவர்கள் தான். ஆனால் அறுவெறுக்கத்த தனி மனித தாக்குதல்களை - அவதூறுகளை வேரறுப்போம்.” எனக் குறிப்பிட்டிருந்தது.