சமூக வலைதளங்களில் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க-விற்கு ஆதரவாக பதிவிட்டு வருபவர் கிஷோர் கே சுவாமி. இவர் பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு கட்சியினரையும் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவார்.
அவர் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து மிகவும் மோசமாக பதிவிட்டு இருந்தது பத்திரிகையாளர்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி தமிழ்நாடு பெண் பத்திரிக்கையாளர் மையம் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் கிஷோர் கே சுவாமி மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் மனுவில், “பெண் பத்திரிகையாளர்களை கண்ணியக்குறைவாகவும் பொதுவெளியில் அவர்களுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தூண்டிவிடும் வகையிலும், பத்திரிகையாளர்களுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டுவரும் கிஷோர் கே சுவாமியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் ” என கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த சைபர் க்ரைம் போலிஸார் கிஷோர் கே சுவாமியை இன்று கைது செய்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட கிஷோர் கே சுவாமிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.