பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகர்கள் ஆகலாம் என்றிருந்த நிலையை மாற்றி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க சட்டம் தமிழகத்தில் 2006ஆம் ஆண்டு கலைஞர் தலைமையிலான தி.மு.க ஆட்சியில் அமலுக்கு வந்தது.
அதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல இடங்களில் அர்ச்சகர் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டு, பிராமணர் அல்லாதோர் கற்கத் தொடங்கினர். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என தி.மு.க அரசு சட்டம் இயற்றினாலும், அதற்கு பிராமணர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் உச்சநீதிமன்றம் சென்று உடனடியாக தடை வாங்கினர்.
2006 - 2007ஆம் ஆண்டில் 207 பேர் பயிற்சி முடித்து வெளியேறியதில் இதுவரை இருவர் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அரசுத் தரப்பு, தீர்ப்பை பிராமணர்கள் சங்கத்திற்கு சாதகமாக அமையவே பாடுபட்டது.
2015ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் எனத் தீர்ப்பு வழங்கினாலும், பல்வேறு குழப்பம் மிகுந்த நிபந்தனைகளால் இன்னும் முழுமையாக சட்டம் அமல்படுத்தப்படவில்லை.
ஆறாண்டு காலமாக மத்தியில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்துக்களின் நலனுக்காக போராடுவதாகக் கூறி வருகிறது பா.ஜ.க. ஆனால், பெரும்பான்மை இந்துக்களுக்குப் பயனளிக்கும் ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ சட்டத்தை அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், அனைத்து இந்துக்களின் பாதுகாவலன் என்று கூறும் பா.ஜ.க பெரும்பான்மை இந்துக்களின் விருப்பத்தை நிறைவேற்ற குரல் கொடுக்குமா என தி.மு.க எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அனைத்து சாதியினரும் தாங்கள் நம்பும் கடவுளை நெருங்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை பெரும்பான்மை இந்துக்களுக்காக தலைவர் கலைஞர் கொண்டு வந்தார். அனைத்து இந்துக்களின் பாதுகாவலன் என்று கூறும் பா.ஜ.க பெரும்பான்மை இந்துக்களின் விருப்பத்தை நிறைவேற்ற குரல் கொடுக்குமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.