தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இதனால் மாநிலத்தின் பல பகுதியில் இயங்கி வந்த அரசு இ-சேவை மையங்கள் மூடப்பட்டதால் மாணவர்கள், பொதுமக்கள் பல்வேறு துயரங்களை சந்தித்துவருகின்றனர்.
குறிப்பாக, அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்காக சேர்க்கை விண்ணப்பம் ஆன்லைன் முறையில் கொண்டுவரப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல் அரச மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் சேருவதற்கு இந்த ஆண்டு ஆன்லைன் முறை கொண்டுவரப்பட்டு இன்று முதல் (ஜூலை 20) விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் அனுப்ப அனைத்து மாணவர்களிடமும் கணினி மற்றும் இணையதள வசதி இல்லை. இதனால் மாணவர்கள் பொது இ-சேவை மையங்களுக்குத்தான் செல்ல வேண்டும். இதேபோல் கல்லூரிகளில் சேருவதற்கு சாதி, வருமான, இருப்பிடம் மற்றும் முதல் பட்டதாரி சான்று உள்ளிட்ட சான்றுகள் பெறுவதற்கும் இ-சேவை மையங்களுக்குத்தான் செல்லவேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில் இ - சேவை மையங்கள் மூடப்பட்டதால், மாணவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. எனவே தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள இ - சேவை மையங்கள் முறையாக திறக்கப்பட்டுள்ளதாக என்பதனைக் கண்காணித்து, இ - சேவை மையங்களை முழுவதுமாக திறக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.