கொரோனா பாதிப்பில் மூன்றாம் இடத்தில் இருக்கும் தலைநகர் டெல்லியில், தற்போது கனமழையால் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கின்றது. குறிப்பாக வெளுத்துவங்கும் கனமழையால் பல பகுதிகளும் வெள்ளக் காடாகக் காட்சி அளிக்கின்றன.
வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் கனமழை முதல் அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சனி இரவில் பெய்த மழையின் காரணமாக டெல்லியில் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக பாலத்தின் அடியில் ஒருவர் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. அப்பகுதியில் சென்ற டிரக் டிரைவர் ஒருவர் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டுள்ளார்.
அதுபோன்று ஐ.டி.ஓ மெட்ரோ ஸ்டேஷன் பகுதியில் உள்ள குடியிருப்பு ஓரமாக உள்ள கால்வாயில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்தால் வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.
அந்த வீட்டின் வளாக பகுதிகளில் யாரும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் ஞாயிறு காலை 5.30 மணி வரை, 4.9 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை பெய்தால் வடிவதற்கான முறையான வடிக்கால் வசதி இல்லாததே தலைநகர் நீரில் மிதப்பதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். டெல்லியைப் போன்றே அசாம், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழையால் மக்களின் வாழ்வதம் முற்றிலும் முடங்கிப்போயியுள்ளனர்.