காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள அரசு புறம்போக்கு இடங்களில் உள்ள மரங்களை அரசு அதிகாரிகள் அனுமதியின்றி வெட்டிச் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக வெளியான தகவலில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள துளாவூர் கிராமத்தில் கண்மாய் மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில் பல லட்சம் மதிப்புள்ள பழைமையான மரங்கள் அதிக அளவில் உள்ளது.
இந்த பகுதியில் உள்ள அரசி கண்மாய், புக்களம் கண்மாய் மற்றும் வரத்துக் கால்வாய் பகுதிகளை தூர்வாரும் மாவட்டம் நிர்வாகம் இறங்கியுள்ளது. அதன்படி இந்த கண்மாய்களில் தூய்வாரப்படும் மண்களை தேசிய நெடுஞ்சாலை பணிக்கு பயன்படுத்தப்போவதாக கூறப்பட்டதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து மழை நீர் கண்மாயில் தேங்குவதற்கு தேவையான தூர்வாரும் பணிகள் மட்டும் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் தூர்வாரும் பணிகள் நடைபெறும் பொழுதே ஆளும் கட்சியைச் சேர்ந்த சில முக்கிய புள்ளிகள் பல லட்சம் மதிப்புள்ள மரங்களை அரசு அனுமதியின்றி வெட்டி வண்டிகள் மூலம் எடுத்துச் செல்கின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் முறையிட்டுள்ளனர். ஆனால் அரசு அதிகாரிகள் தரப்பில் தற்போதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் மரங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.